தமிழகம்

300 ஆண்டுகளில் எந்த தேதியை சொன்னாலும், அதற்கான கிழமையை சொல்லும் சிறுவன்: கின்னஸ் சாதனைக்கு முயற்சி

செய்திப்பிரிவு

300 ஆண்டுகளில் எந்த தேதியை சொன்னாலும், அதற்கான கிழமையை சொல்லும் சென்னை வேளச்சேரியை சேர்ந்த சிறுவன் கின்னஸ் சாதனைக்கு முயற்சி செய்து வருகிறார்.

வேளச்சேரி நேதாஜி காலனியை சேர்ந்தவர் வேலுசாமி (46). டைல்ஸ் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ஜீவா பிரியா (40). இவர்களுக்கு விஷ்ணுப்பிரியா (14) என்ற மகளும், ஸ்ரீராம் பாலாஜி (12) என்ற மகனும் உள்ளனர். சென்னை கிண்டி ஐஐடியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் விஷ்ணுப்பிரியா 9-ம் வகுப்பும், ஸ்ரீராம் பாலாஜி 6-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். 1900 முதல் 2200 வரையுள்ள 300 ஆண்டுகளில் எந்த தேதியை குறிப்பிட்டாலும், அதற்கான கிழமையை சொல்லும் திறமை ஸ்ரீராம் பாலாஜியிடம் உள்ளது.

இது தொடர்பாக ராம் பாலாஜியின் தந்தை வேலுசாமி, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் புதன்கிழமை அளித்த பேட்டி:

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய தாய் இறந்த தேதியை நாங்கள் அனைவரும் மறந்துவிட்ட நிலையில் என் மகன் சரியாக கூறினான். அப்போதுதான் அவனுக்குள் ஏதோ ஒரு திறமை இருப்பது தெரியவந்தது. ஆரம்பத்தில் 28 ஆண்டுகளில் எந்த தேதியை சொன்னாலும், அதற்கான கிழமையை தெரிவித்தான். இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து கடந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் 200 ஆண்டுகளில் எந்த கிழமையை குறிப்பிட்டாலும், அதற்கான கிழமையை சொன்னான்.

திறமையை மேலும் வளர்த்துக் கொண்ட என் மகன், தற்போது 300 ஆண்டுகள் வரை எந்த தேதியை சொன்னாலும், அதற்கான தேதியை சரியாக சொல்கிறான். கேள்வி கேட்டதும் உடனுக்குடன் பதிலை சொல்லிவிடுகிறான். இதுபோன்ற சாதனையை யாரும் செய்ததில்லை. அதனால், முதல்வரை சந்தித்து மகனின் கல்விக்கும், கின்னஸ் சாதனைக்கும் உதவி செய்யுமாறு கேட்க இருக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சிறுவன் ராம் பாலாஜி கூறுகையில், “செல்போனில் உள்ள காலண்டரை பார்த்துத்தான் திறமையை வளர்த்துக் கொண்டேன். 2011-ம் ஆண்டு முதல் தினமும் 3 மணி நேரம் செல்போனில் காலண்டரை பார்த்து வருகிறேன். செல்போனில் கேம் விளையாடுவேன். பள்ளியில் உள்ள நண்பர்களின் பிறந்த நாள், வீட்டில் நடந்த முக்கிய விசேஷ நாள்களையும் சொல்வேன். சுமாராதான் படிப்பேன். கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும். நான் தற்போது, கின்னஸ் சாதனைக்காக முயற்சி செய்து வருகிறேன்” என்றார் ஸ்ரீராம் பாலாஜி.

SCROLL FOR NEXT