ஆட்டோ ஓட்டுநர்களிடம் அத்துமீறி நடந்து கொள்ளும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சைதாப்பேட்டை, கிண்டி மற்றும் வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சுமார் 100 பேர், வியாழக்கிழமை சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு திரண்டனர்.
ஆட்டோக்களில் உரிய மீட்டர் பொருத்தி, சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட்டாலும்கூட அபராதம் விதித்து தங்களை போலீஸார் துன்புறுத்துவதாக கூறி, புகார் மனுவை அளித்தனர்.
இதுகுறித்து சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கூறியதாவது:
சென்னை மாநகரில் வசிக்கும் என் போன்றவர்களுக்கு கட்டுக்கடங்காத வீட்டு வாடகை என்பதுதான் மிகப் பெரும் பிரச்சினையாக உள்ளது. வீட்டு வாடகையைக் கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கட்டுப்படி ஆகாது. இதை மாற்றி அமைக்க வேண்டும் என அரசை வலியுறுத்தி வருகிறோம். அதே நேரத்தில் அரசின் உத்தரவை ஏற்று, தற்போது மீட்டர் பொருத்தி ஆட்டோக்களை ஓட்டி வருகிறோம். அப்படி இருந்தும்கூட போலீஸ் தொந்தரவு தாங்க முடியவில்லை.
பயணிகளை ஏற்றிச் செல்லும் போது ஆங்காங்கே நிறுத்தி சோதனை செய்கின்றனர். நாங்கள் மீட்டர் போட்டு முறையாக ஆட்டோ ஓட்டினாலும் வேறு ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி அபராதம் விதிக்கின்றனர். இதனால் எங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளுக்கு மாறாக, மீட்டர் கட்டணத்தைவிட மிக அதிகமாக வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் எங்களுக்கு கவலையில்லை. ஆனால் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு முறையாக ஆட்டோ ஓட்டுபவர்களை போலீஸார் துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும். அத்துமீறி நடக்கும் போலீஸார் மீது மாநகர காவல் ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.