காஞ்சிபுரத்தில் வரும் 27-ம் தேதி இந்திய விமானப் படையில் சேருவதற்கான ஆட்கள் தேர்வு முகாம் நடைபெறவுள்ளது. இதில் திருமணமாகாத இளைஞர்கள் பங்கேற்கலாம்.
கடலூர் ஆட்சியர் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய விமானப் படையில் ஒய்(Y) பிரிவுக்கு (Automobile Technician IAF (police) and Ground Training Instructor Trades Only) ஆட்கள் தேர்வு செய்யும் பணி வரும் 27 முதல் 29-ம் தேதி வரை காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் தமிழகத்தில் உள்ள சென்னை, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திருவாரூர், சேலம், கோவை, ஈரோடு, தஞ்சாவூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், நீலகிரி, திருச்சி, கடலூர், காஞ்சிபுரம், திருப்பூர், அரியலூர், பெரம்பலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் அந்தமான்-நிக்கோபார் தீவுகள், புதுச்சேரி யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த திருமணமாகாத இளைஞர்கள் பங்கேற்கலாம். இது தொடர்பான மேலும் விவரங்களை www.indianairforce.nic.in என்ற இணைய தளத்தில் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.