ஹாலிவுட்டில் தனுஷ் நடித்து வரும் படத்தின் கதைக்களத்தை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
தமிழில் கவனம் செலுத்தி வந்த படங்களைத் தொடர்ந்து, ஹாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இதற்காக 3 மாதங்கள் தேதிகள் ஒதுக்கி நடித்து வருகிறார்.
கனடா நாட்டைச் சேர்ந்த இயக்குநர் கென் ஸ்காட் இயக்கத்தில் உருவாகி வரும் படத்துக்கு 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. பிரபல ப்ரெஞ்ச் நாவலான 'The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard' திரைப்படமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. பெரனீஸ் பெஜோ மற்றும் எரின் மொரியார்டி ஆகியோர் தனுஷுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் கதைக்களத்தை அதிகாரபூர்வமாக படக்குழு வெளியிட்டு இருக்கிறது. படத்தின் கதைக்களம் குறித்து படக்குழு கூறியிருப்பதாவது:
"அஜா, இந்தியாவிலிருக்கும் ஏழ்மையான ஆனால் திறமையான மாயாஜால வித்தைக்காரன். நோயில் வாடும் அவனது அம்மா, அவனை ஒரு மர்மமான நோக்கத்துக்காக பாரிஸ் நகரத்தில் இருக்கும் ஐஃபில் டவருக்கு அனுப்புகிறாள். ஒரு டாக்ஸி ஓட்டுநருடன் ஏற்படும் தகராறால் அஜா பாரிஸின் மிகப்பெரிய மரச்சாமான் கடையான ஐகேஈஏ-வில் (IKEA)மாட்டிக் கொள்கிறான். அங்கு மேரி என்பவள் இவனை நண்பனாக்கிக்கொள்ள, இவனுக்கோ அவள் மேல் பார்த்ததும் காதல் வருகிறது.
அஜா எதிர்பாராதவிதமாக ஒரு அலமாரிக்குள் மாட்டிக்கொள்ள, அந்த அலமாரி விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்பட்டு ஐரோப்பாவை சுற்றி வருகிறது. உள்ளே சிக்கியிருக்கும் அஜாவின் கனவும், காதலும், நம்பிக்கையும் சிதைகின்றன. கொள்ளைக்காரர்கள், எல்லையோர காவலர்கள் என தனது பயணத்தில் பலவிதமான மனிதர்களை சந்திக்கும் அஜா, ஆபத்தை தாண்டியபடியே உலகை சுற்றி வருகிறான்.
அஜாவின் அறிவாற்றலும், கைவசம் இருக்கும் தந்திரங்களும் மீண்டும் அவனை பாரிஸ் கொண்டு செல்லுமா? அவனது காதலி மேரியை சந்திக்க வைக்குமா? தனது தாயின் மர்மமான நோக்கம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள முடியுமா?" என்பதே கதைக்களம் என்று படக்குழு தெரிவித்துள்ளது.