தமிழகம்

காணும் பொங்கல் கொண்டாட்டம்: மெரினாவில் 1 லட்சம் பேர் குவிந்தனர்- தொலைந்துபோன 47 குழந்தைகள் மீட்பு

செய்திப்பிரிவு

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நேற்று 1 லட்சம் பேர் குவிந்தனர். கூட்டத்தில் தொலைந்துபோன 47 குழந்தைகளை காவல் துறையினர் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குற்றச்செயல்களில் ஈடுபட்ட 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகமெங்கும் நேற்று காணும் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. காணும் பொங்கலைக் கொண்டாட சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் நேற்று மெரினா கடற்கரைக்கு வந்தனர். இதனால் மெரினா கடற்கரையில் நேற்று சுமார் 1 லட்சம் பேர் குவிந் தனர்.

மெரினா, பெசன்ட்நகர், பாலவாக்கம் ஆகிய கடற்கரைகளில் சவுக்கு கட்டைகளால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு பொதுமக்கள் கடலுக்குள் இறங்காமல் காவல் துறையினர் தடுத்தனர். நீரிலும், நிலத்திலும் செல்லும் கடலோர காவல் படையின் ரோந்து கப்பலான 'ஹோவர் கிராப்ட்' , காணும் பொங்கலை முன்னிட்டு கடலோரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டது. மேலும் கடற்கரை மணலில் வேகமாக செல்லும் 4 சக்கர பீச் பைக்கிலும் போலீஸார் ரோந்து வந்தனர்.

காவலர்களின் எச்சரிக்கையை மீறி கடலில் இறங்கிய இளைஞர்கள் எச்சரித்து அனுப்பப்பட்டனர். கடலோரத்தில் 20 குதிரைகளில் காவலர்கள் சுற்றி வந்தனர். மெரினாவில் 4 இடங்களில் தற்காலிக காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆளில்லா குட்டி கண்காணிப்பு விமானம் மூலமும் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

47 குழந்தைகள் மீட்பு

கூட்ட நெரிசலில் காணாமல் போகும் குழந்தைகளை எளிதில் கண்டுபிடிக்க வசதியாக அவர் களின் கைகளில் அடையாள அட்டையை போலீஸார் கட்டி விட்டனர். அதில் குழந்தையின் பெயர், பெற்றோரின் பெயர், முகவரி மற்றும் செல்போன் எண், போலீஸாரின் தொலைபேசி எண்கள் எழுதப்பட்டிருந்தன. இந்த அடையாள அட்டையை வைத்து கூட்டத்தில் பெற்றோரை பிரிந்து தவிக்கும் குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டன. இப்படி 47 குழந்தைகளை காவல் துறையினர் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

18 பேர் கைது

கடற்கரையில் விளையாடும் போது கீழே விழுந்து அடிபட்ட 15 பேருக்கு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சிகிச்சை அளித்தனர். திருட்டு, பிக்பாக்கெட், பெண்களை கேலி-கிண்டல் செய்தவர்கள் என 18 பேர் கைது செய்யப்பட்டனர். கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கூட்டம் அதிகம் இருந்த இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த இடத்துக்கு கூடுதல் காவலர்கள் அனுப்பப்பட்டனர்.

கிண்டி சிறுவர் பூங்கா, தனியார் தீம் பார்க்குகள், மாநகராட்சிப் பூங்காக்கள் என பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த அனைத்து இடங்களிலும் நேற்று ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். ஆங்காங்கே ஏற்பட்ட சிறு பிரச்சினைகளை தவிர மொத்தத்தில் காணும் பொங்கல் பண்டிகை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் நிறைவடைந் தது.

கூட்ட நெரிசலில் காணாமல் போகும் குழந்தைகளை எளிதில் கண்டுபிடிக்க வசதியாக அவர்களின் கைகளில் அடையாள அட்டையை போலீஸார் கட்டி விட்டனர். அதில் குழந்தையின் பெயர், பெற்றோரின் பெயர், முகவரி மற்றும் செல்போன் எண், போலீஸாரின் தொலைபேசி எண்கள் எழுதப்பட்டிருந்தன. இந்த அடையாள அட்டையை வைத்து கூட்டத்தில் பெற்றோரை பிரிந்து தவிக்கும் குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டன.

SCROLL FOR NEXT