தமிழகம்

நீலகிரியில் நடப்பாண்டுக்கான ஏலம் நிறைவு: தேயிலைத்தூள் விலை ரூ.73.90

செய்திப்பிரிவு

நடப்பாண்டுக்கான தேயிலை ஏலம் நிறைவில், தேயிலைத் தூளின் சராசரி விலை ரூ.73.90-ஆக இருந்தது.

கென்யா, உகாண்டா, இந்தியா, இலங்கை, வங்கதேசம், டான்சான்யா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் அசாம், நீலகிரி, வயநாடு மற்றும் கர்நாடகாவில் தேயிலை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்தாண்டு பருவநிலை மாற்றம், போதிய மழையின்மை காரணங்களால், உலகளவில் தேயிலைத் தூள் உற்பத்தி குறைந்துள்ளது. இந்தியாவில் சி.டி.சி., ஆர்தோடக்ஸ் ரக தேயிலைத் தூள் உற்பத்தி செய்யப்படுகிறது. ரஷ்யா, பாகிஸ்தான் நாடுகள் அதிகளவில் தேயிலை இறக்குமதி செய்கின்றனர். பாகிஸ்தான் 12 சதவீதத்துடன், இறக்குமதியில் 2-ம் இடத்தில் உள்ளது. இந்நிலையில், கென்யாவின் தேயிலை உற்பத்தி 3 சதவீதம் உயர்ந்த நிலையில், பாகிஸ்தான் அங்கு கொள்முதல் செய்து வருகிறது. இதனால் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் கொள்முதல் செய்யும் தேயிலையின் அளவு குறைந்துள்ளது. இதனால் ஏல மையங்களில் தேயிலைத் தூள் தேக்கமடைந்து வருகின்றன.

இந்தாண்டு மார்ச் 26-ம் தேதி குன்னூர் தேயிலை வர்த்தகர்கள் சங்க ஏல மையத்தில், தேயிலைத் தூளின் சராசரி விலை அதிகபட்சமாக ரூ.110.70 ஆகவும், பின்னர் ரூ.100-க்கு கீழாகவும் குறைந்தது. அதேசமயம் மார்ச் 8-ம் தேதி ஒரு கிலோ தேயிலைத் தூளின் சராசரி விலை ரூ.104.11-ஆக இருந்தது. அதன் பின்னர் சராசரி விலையில் வீழ்ச்சி ஏற்பட்டது.

இந்தாண்டு குன்னூர் தேயிலை வர்த்தகர்கள் ஏல மையத்தில், தேயிலைத் தூள் கிலோவுக்கு சராசரி விலை ரூ.73.90-ஆக இருந்தது. இதைத்தொடர்ந்து இந்தாண்டுக்கான தேயிலை ஏலம் முடிவடைந்தது.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்கு பின், அடுத்தாண்டுக்கான ஏலம் ஜனவரி 2-ம் தேதி நடைபெறும். கடந்த வாரத்தைவிட சிறிது முன்னேற்றம் காணப்பட்டாலும், ரூ.1.47 கோடி மதிப்பிலான தேயிலைத் தூள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளது.

SCROLL FOR NEXT