ஒகேனக்கல் அருவி முற்றிலும் வறண்டுள்ளதால் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக சிறப்பு சுற்றுலா பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம். இந்த கழகத்தின் சார்பில் பல சுற்றுலா தலங்களில் தங்கும் விடுதிகள், உணவகங்கள், சுற்றுலா பேருந்துகள் உள்ளிட்டவை பராமரிக்கப்படுகின்றன. மேலும் பல சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பேக்கேஜ்களையும் இக்கழகம் செயல்படுத்தி வருகிறது.
அதேவேளையில் கோடை விடுமுறையின் போது சிறப்பு சுற்றுலா பேக்கேஜ்களை வழங்கி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை சிறப்பு சுற்றுலா அழைத்து செல்லப் படுகிறது. சென்னை - ஏற்காடு - ஒகேனக்கல், சென்னை - மைசூரு - பெங்களூரு, சென்னை - ஊட்டி, சென்னை - மூணாறு, சென்னை - கொடைக்கானல் ஆகிய சிறப்பு பேக்கேஜ்கள் உள்ளன. கோடை விடுமுறையில் இவை செயல்படுத் தப்படுவதாலும் அனைத்து ஏற்பாடு களையும் அந்த கழகமே செய்து விடுவதாலும் பலர் பயன்படுத்தி வருகின்றனர்.
காவிரி ஆற்றில் அமைந்துள்ள ஒகேனக்கல் அருவி, தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்றதாகும். இதற்காக சேலம் மாவட்டத்தில் உள்ள மலைவாசஸ்தலமான ஏற்காடு வழியாக ஒகேனக்கலுக்கு சிறப்பு சுற்றுலா அமல்படுத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் ஒகேனக்கல் அருவிக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டுள்ளது.
இதன் காரணமாக சென்னை - ஏற்காடு - ஒகேனக்கல் சிறப்பு சுற்றுலாவை சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ரத்து செய்துள்ளது. அதே வேளையில், பிற சிறப்பு சுற்றுலாக் கள் வழக்கம்போல செயல்படு கிறது. அவற்றில் கலந்துகொள்ள பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். டிக்கெட்கள் வேகமாக பதிவாகின்றன என்று அக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோடை விழா ஏற்பாடுகள்
ஒவ்வொரு ஆண்டும் கொடைக் கானல், ஊட்டி, ஏலகிரி, ஏற்காடு, ஜவ்வாது மலை, கல்வராயன் மழை ஆகிய இடங்களில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். இவற்றை சுற்றுலா வளர்ச்சிக் கழகமும் அந்தந்த மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்தும். இந்த ஆண்டும் மே மாதத்தில் கோடை விழாக்களை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.