தமிழகம்

வன விலங்குகளுக்காக தீபாவளி கொண்டாடாத மக்கள்

எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வன விலங்குகளுக்காக இருளர் இன கிராம மக்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதைத் தவிர்த்து வருகின்றனர்.

தீபாவளி பண்டிகை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பட்டாசு, புத்தாடை, இனிப்பு தான். நகரம், கிராமம் என அனைத்து பகுதிகளிலும் தீபாவளி அன்று பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பட்டாசுகள் வெடித்து மகிழ்வார்கள். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வன விலங்குகளுக்காக இருளர் இன மக்கள் தீபாவளியை தவிர்த்து வருகின்றனர்.

வனப்பகுதியை ஒட்டியுள்ள பெட்டமுகிலாளம், கொடகரை, கோட்டூர் கொட்டாய், தொட்டமஞ்சி, புல்லட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.

அவர்கள் வனப்பகுதியில் கிடைக்கும் பொருட்களை சந்தைகளில் விற்பனை செய்து, அதன் மூலம் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வனப் பகுதியில் வாழும் இவர்கள் விலங்குகளுக்காக தீபாவளி கொண்டாடுவதில்லை என தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து இருளர் இன மக்கள் கூறும்போது, "எங்களது முன்னோர்கள் காலத்தில் இருந்தே தீபாவளி கொண்டாடுவதில்லை. வனதேவதை திருவிழா, தை பொங்கல் உள்ளிட்ட விழாக்கள் மட்டுமே கொண்டாடி வருகிறோம். தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்கும் சப்தம் கேட்டால், அது வன விலங்குகளுக்கு ஆபத்து உருவாக்கும். இதன் காரணமாகவே எங்களது குழந்தைகளும் தீபாவளியை தவிர்த்து வருகின்றனர்", என்றனர்.

வவ்வால்கள்

ஓசூர் அருகே உள்ள கொளதாசபுரம் கிராமத்தின் மையப் பகுதியில், ஏரிக்கரையின் ஓரம் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த 10-க்கும் மேற்பட்ட மாமரங்கள் உள்ளன. இம்மரத்தில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் வாழ்ந்து வருகின்றன. வவ்வால்கள் இருப்பதால் தான் தங்களது கிராமம் நோய், நொடியின்றி இருப்பதாக கருதி வவ்வால்களை பாதுகாத்து வருகின்றனர். மேலும், தீபாவளி மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் வவ்வால்கள் பயந்து விடக் கூடாது என்பதற்காக பட்டாசு வெடிப்பதில்லை. இரவு நேரங்களில் வவ்வால்கள் இரை தேடி சென்ற பின்பு தான் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT