தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வம், மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவைக்கு 15-ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. மும்பையை சுற்றியுள்ள மடிவாலா, கோலிவாடா உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். அந்தப் பகுதி களில் தமிழக பாஜக தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மும்பைக்கு மிக அருகில் உள்ள சியோன் கோலிவாடா தொகுதியில் பாஜக வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்ச் செல்வம் நிறுத்தப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பிலா விடுதி கிரா மத்தைச் சேர்ந்த அவர், தற்போது மும்பை மாநகர கவுன்சிலராக உள்ளார். மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தின்போது, ரயில் நிலையத்தில் உயிருக்கு போராடியவர்களை காப்பாற்றியதால், அவருக்கு வீரதீர செயலுக்கான பதக்கத்தை மகாராஷ் டிர அரசு வழங்கி கவுரவித்தது.
பாஜக வேட்பாளரானது குறித்து ‘தி இந்து’வுக்கு தொலைபேசி மூலம் தமிழ்ச்செல்வம் அளித்த பேட்டி:
மகாராஷ்டிரத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வாய்ப்பு எப்படி கிடைத்தது?
வெளிநாடு செல்வதற்காக 35 வருடங்களுக்கு முன்பு மும்பை வந்தேன். அதற்கான வாய்ப்பு கிடைக்காததால் இங்கேயே தங்கி, கிடைத்த வேலைகளை செய்து வந்தேன். மும்பை தமிழர்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளேன். கடந்த 15 ஆண்டுகளாக பாஜகவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறேன். மாநகராட்சி தேர்தலில் சையான் கோலிவாடா வடக்கு வார்டில் அதிக வாக்குகள் பெற்று கவுன்சிலரானேன். மக்களிடம் எனக்கு நல்ல பெயர் இருப்பதால் இப்போது சட்டப்பேரவைத் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உள்ளூர் வேட்பாளர்களை எதிர்த்து உங்கள் பலத்தை எப்படி நிரூபிக்கப் போகிறீர்கள்?
கோலிவாடா பகுதியில் தமிழர்கள் மற்றும் பஞ்சாபிகள் நிறைய உள்ளனர். அவர்கள் மத்தியில் எனக்கு நல்ல அறிமுகம் உள்ளது. தற்போதைய காங்கிரஸ் எம்எல்ஏ தொகுதிக்காக பெரிதாக எதையும் செய்யவில்லை. அவரிடம் 20 இறக்குமதி கார்கள் உள்ளன. அவர் மீது மக்களுக்கு வெறுப்பு உள்ளது. இலங்கை தமிழர்கள் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி மும்பை ஆசாத் மைதானத்தில் வைகோவை வைத்து 30 ஆயிரம் பேர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளேன். அப்போது பாஜக தேசிய தலைவராக இருந்த நிதின் கட்கரியுடன் சென்று இலங்கை தூதரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.
வெளி மாநிலத்தவருக்கு சீட் கொடுத்ததால் பாஜகவில் உட்கட்சி பூசல் கிளம்பவில்லையா?
எப்படி இல்லாமல் போகும். தஞ்சா வூரில் ஒரு ஹரியாணாகாரருக்கு சீட் கொடுத்தால் நம்ம ஊர் ஆட்களின் மனநிலை எப்படி இருக்குமோ அப்படித்தான் இங்கும் உள்ளது. ஆனால், பெரும்பாலானவர்கள் எனக்கு ஆதரவான மனநிலையில் தான் உள்ளனர்.தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழர்களுக்காக மட்டுமன்றி இங்குள்ள எல்லா தரப்பு மக்களின் நலனுக்காக பணியாற்றுவேன். இவ்வாறு தமிழ்ச்செல்வம் கூறினார். தமிழகத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் 30 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு தமிழ்ச் செல்வத்துக்கு கிடைத்துள்ளது.