விழுப்புரம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டி நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு தீயில் கருகி சாம்பலானது.
இதையடுத்து இன்று ஆய்வு மேற்கொண்ட திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் உதயகுமார் இது எதிர்பாராத விபத்து என்று கூறினார்.
புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் வந்த பாசஞ்சர் ரயில் நேற்று மூன்றாவது நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நள்ளிரவில் 7 வது பெட்டி திடிரென தீ பிடித்து எரிய தொடங்கியது. இந்த தீயில் பெட்டியில் உள்ள பயணிகள் இருக்கை, மேற்கூரை, ஜன்னல், கதவு உட்பட அனைத்தும் தீயில் கருகியது. இத்தகவல் அறிந்த விழுப்புரம் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்புத்துறையில் போராடி தீயை அணைத்தனர்.
இத்தகவல் அறிந்த திருச்சி ரயில்வே கோட்டமேலாளர் உதயகுமார் இன்று (வியாழக்கிழமை) காலை விழுப்புரம் வந்து எரிந்த ரயில் பெட்டியை நீண்ட நேரம் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இது விபத்துதான். எதிர்பாராத விபத்துதான். தற்போது விசாரணை தொடங்கியுள்ளது. இது விபத்தாகத்தான் கருதவேண்டியுள்ளது. தீயில் சேதமடைந்த விபரங்கள் சேகரிக்க தொடங்கியுள்ளோம். விசாரணை அறிக்கை விரைவில் தெரியவரும். தீயை அணைக்க ரயில்வேயில் வசதியில்லை. தீயை அணைக்க ரயில்வேதுறை மாநில அரசின் உதவியை நாடும். ரயில்வே முழுக்க முழுக்க மக்களுக்கான சேவையில் உள்ளது. அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த ரயில்வேவிடம் நிதி இல்லை.அரசு நிதி ஒதுக்கீடு செய்தால்தான் அனைத்து இடங்களிலும் கேமரா பொறுத்தப்படும் என்றார். அப்போது உடன் ரயில்வே கோட்ட பாதுகாப்பு ஆணையர் சோம சேகர், ரயில் நிலைய மேலாளர் ராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.