தேனி மாவட்டத்தில் கட்சி அடிப் படையில் தேர்தல் நடைபெறும் 285 இடங்களுக்கு தேமுதிகவினர் 65 பேர் மட்டுமே விருப்பமனு அளித்துள்ளனர். தனித்து போட்டியிடுவதால் வெற்றிபெற முடியுமா என்ற சந்தேகம்தான் ஆர்வம் குறைய காரணம் என தெரிகிறது.
தேனி மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சிகுழுவுக்கு 10 கவுன்சிலர்கள், 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 98 ஒன்றிய கவுன்சிலர்கள், 6 நகராட்சிக்கு 177 கவுன்சிலர்கள் மற்றும் 130 கிராம பஞ்சாயத்து தலைவர், 1,161 கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் என மொத்தம் 1,912 இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது.
அதிமுக நிர்வாகிகள் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருப்ப மனுக்களை பெற்றுள் ளனர். திமுகவில் சுமார் 6,800 பேர் விருப்பமனு கொடுத்துள்ளனர். இன்று மாலை 5 மணி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதால், 8 ஆயிரம் பேர் வரை விருப்ப மனு கொடுப்பர் என அக்கட்சி நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர். தேமுதிக மேலிடம் தனித்து போட்டியிட முடிவு செய்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கட்சி அடிப்படையில் தேர்தல் நடக்கவுள்ள 285 பதவி இடங்களுக்கு நேற்று வரை 65 பேர் மட்டுமே விருப்பமனுக்களை அளித்துள்ளனர்.
தனித்து போட்டியிடுவதால், வெற்றி பெற முடியுமா என்ற சந்தேகத்தால் தேமுதிக கட்சியினரிடம் ஆர்வம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தேமுதிக மாவட்ட பொறுப்பாளர் எம்.என்.கிருஷ்ண மூர்த்தியிடம் கேட்டபோது, உள் ளாட்சி தேர்தல் தேனி மாவட்ட பொறுப்பாளராக கலை இலக்கிய அணி மாநிலதுணைச்செயலாளர் சிங்கை சந்துரு நியமிக்கப் பட்டுள்ளார். 3 நாட்களில் 65 பேர் விருப்பமனுக்கள் கொடுத்துள்ளனர். 30-ம்தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளதால், மேலும் பலர் விருப்பமனுக்கள் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார்.