நில அபகரிப்பு புகார் தொடர்பாக, ஈரோடு மாவட்ட அ.தி.மு.க. பொருளாளர் அப்பாதுரையிடம், நில அபகரிப்பு தடுப்புப்பிரிவு போலீசார் செவ்வாய்க்கிழமைவிசாரணை நடத்தினர்.
சென்னை மேற்கு வேளச்சேரி யைச் சேர்ந்த மறைந்த சுதந்திரப் போராட்ட தியாகி சதாசிவத்தின் மகன் சம்பந்தம், தனக்கு சொந்தமான ரூ. 5 கோடி மதிப்புள்ள நிலத்தை, அப்பாதுரை அபகரித்துக் கொண்டதாக ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் கடந்த மாதம் 30-ம் தேதி புகார் அளித்தார்.
அதில், ஈரோடு மாவட்டம் கவுண்டச்சிபாளையம் கிராமம், வள்ளிபுரத்தான்பாளையத்தில், தங்களுக்குச் சொந்தமான 2.58 ஏக்கர் நிலத்தை வள்ளிபுரத்தான் ஊராட்சி முன்னாள் தலைவரும், தற்போதைய அ.தி.மு.க. ஈரோடு மாவட்டப் பொருளாளராகவும் உள்ள அப்பாதுரை அபகரித்துள்ளதாக புகாரில் தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீசார் கடந்த 1ம் தேதி சம்பந்தத்திடம் விசாரித்தனர். அவரிடமிருந்து குறிப்பிட்ட நிலம் தொடர்பான ஆதாரங்களை போலீசார் பெற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், செவ்வாய்க் கிழமை காலை ஈரோடு மாவட்ட அ.தி.மு.க. பொருளாளர் அப்பாதுரையிடம் நில அபகரிப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அவர்மேல் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்தும், குறிப்பிட்ட நிலம் அவருக்கு எப்படி சொந்தமானது, அதற்கான ஆவணங்கள் ஆகியவற்றையும் போலீசார் விசாரணையின்போது கேட்டுப் பெற்றுள்ளனர்
விசாரணை குறித்து அப்பாதுரையிடம் கேட்டபோது, “தற்போது புகார் அளித்துள்ள சம்பந்தத்தின் மூதாதையர்கள், குறிப்பிட்ட நிலத்தை 1933-ல் எங்களது குடும்பத்துக்கு விற்றுவிட்டனர். அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. இது குறித்த விவரத்தை போலீசாரிடம் தெரிவித்துள்ளேன்” என்றார்.
கவுண்டச்சிபாளையம் கிராமத்தில் உள்ள அய்யன், அப்பத்தாள் கோயிலுக்கு அருகே உள்ள புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக, அப்பாதுரை மீது கடந்த 29-ம் தேதி ஈரோடு சம்பத் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் நல்லசிவம் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து கேட்டபோது, “குறிப்பிட்ட நிலம் எனக்கு சொந்தமானது. அதற்கான ஆதாரம் உள்ளது. அது கோயிலுக்கு சொந்தமானது என்பதற்கோ, புறம்போக்கு என்பதற்கோ ஆதாரமில்லை” என்று அப்பாதுரை தெரிவித்தார்.
நில அபகரிப்பு தொடர்பான விசாரணை குறித்து மேலிடத்துக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அங்கிருந்து வரும் உத்தரவைத் தொடர்ந்து அடுத்தக் கட்ட நடவடிக்கை இருக்கும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் கே.வி. ராமலிங்கத்தின் பதவி தப்புமா?
இதனிடையே விளையாட்டு மற்றும் இளைஞர்நலத்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் மீதான நில அபகரிப்பு புகார் குறித்து, கடந்த 28 மற்றும் 29-ம் தேதிகளில் விசாரணை நடத்திய உளவுத்துறை அதிகாரிகள், அது தொடர்பான அறிக்கையை அனுப்பியுள்ளனர். ஏற்காடு இடைத்தேர்தல் முடிந்ததும், இதுதொடர்பான நடவடிக்கை இருக்கும் என அ.தி.மு.க. வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.