‘பாரத ரத்னா’ விருது பெற்ற ஒரே இந்திய நடிகர் எம்.ஜி.ஆர். என்று ‘ரிக் ஷாக்காரன்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் புகழாரம் சூட்டினார்.
எம்.ஜி.ஆர். நடித்து 1971-ம் ஆண்டு வெளியாகி அமோக வெற்றி பெற்ற படம் ‘ரிக் ஷாக்காரன்’. இந்தப் படத்தை சத்யா மூவீஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்தார். 45 ஆண்டுகளுக்கு பின் டிஜிட்டல் முறையில் இப்படம் உருவாக்கப்பட்டு விரைவில் திரைக்கு வருகிறது. பி.மணி, டி.கே.கிருஷ்ணகுமார் ஆகியோர் டிஜிட்டல் முறையில் படத்தை உரு வாக்கியுள்ளனர். படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை தேவி பாரடைஸ் திரையரங்கில் நேற்று நடந்தது. படத்தின் பாடல் மற்றும் முக்கிய காட்சிகள் திரையிடப்பட்டன. தமிழகம் முழுவதும் இருந்து ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், நடிகர்கள் மயில்சாமி, சின்னிஜெயந்த், சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் ஆர்.எம்.வீரப்பன் பேசியதாவது:
‘ரிக்்ஷாக்காரன்’ படத்தை 45 ஆண்டுகளுக்கு முன் தயாரித்து வெளியிட்டேன். சென்னையில் இந்தப் படம் வெளியான அதே திரையரங்கில் இப்போது டிரைலர் வெளியீட்டு விழா நடப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பெரும் பொருட்செலவில் ‘ரிக்்ஷாக்காரன்’ படத்தை தயாரித்தோம். ‘அழகிய தமிழ்மகள் இவள்’ பாடலுக்கு 40 அடி உயரத்தில் பிரம்மாண்டமான ‘செட்’ அமைத்தோம். அந்தக் காலத்தில் இவ்வளவு உயரத்தில் அலங்காரமான ‘செட்’ போட ஏராளமாக செலவானது. ரசிகர்களின் ஆவலை நிறைவேற்றி மக்களின் ஆதரவுடன் படம் அமோக வெற்றி பெற்றது.
எம்.ஜி.ஆரின் அக்கா வேடத்தில் வேறு ஒரு நடிகையைப் போட்டு 3 ஆயிரம் அடிகள் எடுத்தோம். அது திருப்தியாக இல்லாததால் அமெரிக்காவில் இருந்து அப்போது வந்திருந்த நடிகை பத்மினியிடம் பேசி அவரை அந்தப் பாத்திரத்தில் நடிக்க வைத்தோம். இந்தப் படத்தில்தான் நடிகை மஞ்சுளா கதாநாயகியாக அறிமுகமானார்.
அப்போது இந்தப் படத்தை நான் தயாரித்திருந்தாலும் இப்போது தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட இப்படத்தின் சில காட்சிகளைப் பார்க்கும்போது நான் தயாரித்த படமா என்று எனக்கே சந்தேகமாக உள்ளது. படத்தின் வெற்றிக்கு இசை உட்பட எல்லா அம்சங்களும் காரணமாக இருந்தாலும் முக்கியமான காரணம் எம்.ஜி.ஆர்.
‘ரிக்்ஷாக்காரன்’ படத்தில் நடித்ததற்காக அவருக்கு நாட்டிலேயே சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருது கிடைத்தது. பின்னர், அவரது மக்கள் சேவைக்காக ‘பாரத ரத்னா’ விருதும் பெற்றார். இந்தியாவியே ‘பாரத ரத்னா’ விருது பெற்ற ஒரே நடிகர் எம்.ஜி.ஆர்.தான்.
இவ்வாறு ஆர்.எம்.வீரப்பன் பேசினார். விழாவுக்கான ஏற்பாடுகளை ‘உரிமைக்குரல்’ மாத இதழ் ஆசிரியர் பி.எஸ்.ராஜ், செள.செல்வகுமார், ஆர்.லோகநாதன், மனோகரன், ஆர்.இளங்கோவன், ஹயாத், கே.பாபு உட்பட புரட்சித் தலைவர் பக்தர்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் செய்திருந்தனர்.