திருப்பூரில் 3 கன்டெய்னர் லாரிகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 570 கோடி குறித்து திமுக தொடர்ந்த வழக்கில், சிபிஐ 2 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திமுக எம்.பி.யும், செய்தி தொடர்பு பிரிவு செயலாளருமான டி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ''கடந்த மே 13-ம் தேதி திருப்பூர் மாவட்ட தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு அதிகாரியான விஜயகுமார் மூன்று கன்டெய்னர் லாரிகளை துரத்திச்சென்று மடக்கிப் பிடித்தார். இந்த 3 லாரிகளிலும் இருந்து ரூ. 570 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த லாரிகள் பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. லாரி டிரைவர்கள் மற்றும் பின்தொடர்ந்து வந்த 3 கார்களில் வந்தவர்கள், இந்த பணத்திற்குரிய முறையான ஆவணங்களை காட்டவில்லை.
பாதுகாப்பிற்காக வந்ததாக கூறிய ஆந்திர மாநில போலீஸார் சீருடை அணியவில்லை. ஆந்திர பதிவு எண்களைக் கொண்ட இந்த லாரிகளில் ஒரே நபரின் புகைப்படம், வெவ்வேறு பெயர்களில் 2 லாரிகளின் உரிமையாளர் போல உள்ளது. இதில் இருந்தே ஒரு லாரியின் உரிமையாளர் போலி என அப்பட்டமாக தெரிகிறது. பணம் பிடிபட்ட 18 மணி நேரத்திற்குப்பிறகு திடீரென ஸ்டேட் வங்கி அதிகாரிகள் அந்தப்பணத்திற்கு சொந்தம் கொண்டாடியதால் பணம் எண்ணப்பட்டு பத்திரமாக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அந்த பணக்கட்டுகளில் ஆக்ஸிஸ் வங்கி முத்திரை இருந்தது. இந்த ரூ.570 கோடியும் கோவை கிளையில் இருந்து விசாகபட்டிணம் கிளைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், இதற்கு முன்கூட்டியே ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் பெற்றுள்ளதாகவும் ஸ்டேட் வங்கி தெரிவிக்கிறது.
ஆனால் ரிசர்வ் வங்கி அதுபோல எந்த உத்தரவும் வழங்கவில்லை. ரிசர்வ் வங்கியே இவ்வளவு பெரிய தொகையை பரிமாற்றம் செய்ய நினைத்தாலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ரயிலில் தான் கொண்டு செல்ல வேண்டும். பிடிபட்ட ரூ. 570 கோடியில் எந்த விதிமுறைகளும் பின்பற்றப்படாதது சந்தேகத்தை அதிகரிக்கச் செய்கிறது.
சமீபத்தில் தமிழக அமைச்சர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த கரூர் அன்புநாதன் வீட்டில் பறிமுதல் செய்த தொகை மூலம் ஹவாலா பரிவர்த்தனைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இதுபோல நீலகிரி மாவட்டத்தில் இருந்து ஏற்கெனவே 5 கன்டெய்னர்களில் ஏராளமான பணம் ஆந்திராவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. வங்கி அதிகாரிகளும் இந்த சதியில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே இதுதொடர்பாக சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிச்சத்திற்கு வரும். தவறு செய்தவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் மட்டுமல்லாது, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். திமுக தலைவர் கருணாநிதியும் சுதந்திரமான விசாரணை நடத்த கோரியுள்ளார். எனவே இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ‘‘இதுதொடர்பாக சிபிஐ தனது நிலைப்பாடு குறித்து 2 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.