தமிழகம்

அறக்கட்டளை நடத்தி மோசடி: 400 பவுன் அடகு நகைகளுடன் தம்பதி தலைமறைவு

செய்திப்பிரிவு

சிவகங்கை அருகே கிராமத்தினர் அடகுவைத்த 400 பவுன் தங்க நகைகளுடன் மாயமான தம்பதியை போலீஸார் தேடி வருகின்றனர். திருப்பத்தூரில் கடந்த 2012-ம் ஆண்டு முதல், அன்னை மீரா கிராமிய நல அறக்கட்டளை எனும் அமைப்பு செயல்பட்டுள்ளது. கல்லல் பகுதியைச் சேர்ந்த ராஜா, அவரது மனைவி சுமதி ஆகியோர் இந்த அறக்கட்டளையை நடத்தி வந்தனர்.

இவர்கள் மிகக் குறைந்த வட்டிக்கு நகைக்கடன் வழங்குவதாக அறிவித்துள்ளனர். இதை நம்பிய நெடுமரத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர், தங்களது நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர். சிலர் அடகுவைத்த நகையை மீட்க பணத்தையும் திருப்பிச் செலுத்தி உள்ளனர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் தம்பதி இருவரும் 400 பவுன் நகைகளுடன் மாயமாகினர். அவர்களை கிராமத்தினர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து, கடந்த மாதம் நடந்த குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் கிராமத்தினர் புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். இந்நிலையில், நேற்று சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி, 400 பவுன் தங்க நகைகளுடன் மாயமான ராஜா, மனைவி சுமதி மீது வழக்குப் பதிவு செய்தார். இதேபோல, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் அறக்கட்டளை பெயரில் பல நூறு பவுன் தங்க நகைகளுடன் அத்தம்பதி மாயமானது தெரியவந்தது.

அவர்கள் கல்லல் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், போலியான முகவரி கொடுத்து ஏமாற்றியதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

SCROLL FOR NEXT