சாதி, மதம், பிரிவினைகள் எல்லாம் மறந்து ‘எல்லோரும் ஒன்றே’ எனும் உன்னதத்தை மக்கள் வெளிப்படுத்தினார்கள். வெற்றிடத்தை நோக்கிச் செல்லும் காற்றாய், பாதிக்கப்பட்ட மக்களுக்கு கரங்கொடுக்க புதிய காற்றாய் முதலில் களமிறங்கியவர்கள் இளைஞர்கள்தான். இந்த இளைய சக்தியை மிகுந்த நம்பிக்கையோடு பார்க்கின்றேன்.
இந்த பெருமழை நமக்கு ஏராளமான செய்திகளை சொல்லாமல் சொல்லிப் போயிருக்கிறது. வசதி படைத்தவர்கள்கூட ஏடிஎம் எந்திரங்களில் பணமெடுக்க முடியாமல், உணவில்லாமல் பட்டினி கிடந்தார்கள். சக மனிதர்களின் துன்பம் கண்டு இயல்பாய் துடைக்க நீளும் கைகளாய், சிறுபான்மை மக்கள் தங்களது பள்ளி வாசல்களின் கதவுகளைத் திறந்து, பாதிக்கப்பட்ட மக்களை அங்கே தங்க வைத்தார்கள். ஏரியில் மண்ணை அள்ள வேண்டும். ஆற்று மணலை அள்ளக்கூடாது. ஆனால், நாம் இதனை மாற்றிச் செய்து கொண்டிருக்கிறோம். அதனால்தான் இத்தனை இன்னல்களை சந்தித்திருக்கின்றோம்.
இழக்காமல் எதையும் பெறமுடியாது என்பார்கள். நாம் இழந்தவைதான் நம்மை இங்கே ஒன்றாய் சேர்த்து வைத்திருக்கிறது. இக்கட்டான தருணத்தில் ஒன்று சேர்ந்தவர்களை யாராலும் பிரிக்க முடியாது. அகரம், ‘தி இந்து’, புதிய தலைமுறை சேர்ந்து நம்மை அழைத்ததோடு, இப்போது சேர்த்தும் வைத்திருக்கிறது. நாமெல்லாம் சேர்ந்து செயல்பட்டு, அடுத்த தலைமுறைக்கு சுத்தமானதாய் இப்பூமியை அளிப்போம்.
என்று இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார்