அரசு நடவடிக்கைக்குக் காத்திருக் காமல் செம்பாக்கம் ஏரியை சுத்தப்படுத்தும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். ஏரியை தூர்வாரி, கழிவுநீர் கலப்பதைத் தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை அடுத்த தாம்பரம் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது செம்பாக்கம் நகராட்சி. இந்த நகராட்சிக்குச் சொந்தமான செம்பாக்கம் ஏரி திருமலை நகர், திரு.வி.க. நகர், சர்வமங்களா நகர், பாலாஜி அவென்யூ, வினோபாஜி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. 150 ஏக்கர் பரப்பிலான இந்த ஏரி, ஆக்கிரமிப்பு, குப்பை கொட்டுவது உள்ளிட்ட காரணங்களால் 110 ஏக்கராக சுருங்கிவிட்டது.
தற்போது இருக்கும் ஏரிப் பகுதியை மீட்கும் முயற்சியில் அப்பகுதியில் உள்ள நகர் நலச் சங்கங்கள் இறங்கியுள்ளன. முன்னதாக, ஏரியில் செம்பாக்கம் நகராட்சி குப்பை கொட்டுவதை, தேசிய பசுமை தீர்ப்பாயம் வரை சென்று தடுத்தனர். தற்போது அங்கிருந்து குப்பையை அகற்றுவதற்கான முயற்சிகளை செம்பாக்கம் நகராட்சி எடுத்து வருகிறது.
இந்நிலையில், தற்போது ஏரியை சுத்தப்படுத்தும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். சர்வமங்களா நகர் குடியிருப்போர் நலச் சங்கத்துடன் சபரி கிரீன் தன்னார்வ அமைப்பு, சிட்லபாக்கம் ரைசிங் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து இப்பணியை தொடங்கியுள்ளன. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அனுமதியுடன், முதல்கட்டமாக, ஏரிப் பகுதியில் தேங்கிய குப்பை, செடிகள், புதர்களை இயந்திரங்கள் மூலம் அகற்றி சுத்தப்படுத்தி வருகின்றனர்.
இப்பணிகளை கடந்த 19-ம் தேதி செம்பாக்கம் நகராட்சித் தலைவர், சாந்தகுமார், சிட்லபாக்கம் பேரூராட்சித் தலைவர் மோகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கடந்த 3 நாட்களாக இப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இதுகுறித்து சர்வமங்களா நகர் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் கூறும்போது, செம்பாக்கம் ஏரிக்கு, பச்சை மலையில் இருந்து சிட்லபாக்கம் வழியாக தண்ணீர் வருகிறது. அதேபோல் சேலையூர், ராஜ கீழ்ப்பாக்கம் ஏரிகளில் இருந்தும் தண்ணீர் வருகிறது. தற்போது ஏரி தூர்ந்துள்ளதால், கடந்த மழைக்காலத்தில் நீரை சேர்த்து வைக்க முடியாமல் போய்விட்டது.
ஏரியை தூர்வார வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத் துள்ளோம். தூர்வாரப்படாதால், அதற்கு வழி ஏற்படும் வகையில், ஏரியை சுத்தப்படுத்தும் பணியில் இறங்கி உள்ளோம். ஏரியில் கழிவுகள், செடிகளை அகற்றி, ஏரி மண்ணை பொக்லைன் இயந்திரம் மூலம் சேர்த்து குவித்து வைத்து வருகிறோம்.
ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் தடுக்க இந்த முயற்சி எடுக்கப் பட்டுள்ளது. இதையடுத்து. ஏரிக் கரையில் மண் கொட்டி, அதில் நடைபாதை அமைக்கவும் முடிவு எடுத்துள்ளோம். எங்கள் முயற்சிக்கு பொதுப்பணித் துறையினர் ஒத்துழைப்பு அளித்துள்ளனர். நகராட்சிகளும் உதவி வருகின்றன.
தொடர்ந்து, பொதுப்பணித் துறையினர் இந்த ஏரியை தூர்வாரி முழுமையாக நீரை சேமிக்க வழி ஏற்படுத்த வேண்டும். மேலும், சிட்லபாக்கம், செம்பாக்கம், பல்லாவரம் பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீரை ஏரிக்குள் விடுவதைத் தடுக்க வேண்டும். கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.