ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு தாயுடன் வந்த மூன்றரை வயது ஆண் குழந்தையை யாரோ கடத்திச் சென்று விட்டனர்.
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்தவர் பரகத்(36). இவரது மனைவி உசேனா பானு(33). இவர்களின் மூன்றரை வயது மகன் முகமது ஆசிப். உசேனா பானு சிகிச்சைக்காக நேற்று காலை 11 மணியளவில் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு வந்தார். மகன் முகமது ஆசிப் மற்றும் உறவினர் ஒருவரையும் உடன் அழைத்து வந்தார். புறநோயாளிகள் பிரிவில் சீட்டு வாங்கி விட்டு, அதில் குறிப்பிடப்பட்டிருந்த சிகிச்சைப் பிரிவுக்குச் சென்றார். அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் குழந்தையைக் கீழே விட்டுவிட்டு அருகே நின்றுகொண்டிருந்தார்.
பின்னர் மருத்துவரைப் பார்க்க அவரது அறைக்கு உள்ளே செல்லும்போது, மகன் முகமது ஆசிப்பை வெளியிலேயே விட்டு விட்டு சென்றுள்ளார். மருத்துவரை பார்த்துவிட்டு சுமார் 10 நிமிடங்கள் கடந்த பின்னர் உசேனா பானு வெளியே வந்து மகனைத் தேடியபோது அவரைக் காணவில்லை. மருத்துவமனை வளாகம் முழுவதும் தேடிய பின்னரும் முகமது ஆசிப் கிடைக்க வில்லை.
இதுகுறித்து ஸ்டான்லி மருத்துவ மனையில் உள்ள புறக்காவல் நிலையத்தில் உசேனா பானு புகார் கொடுத்தார். போலீஸாரும் பல இடங்களில் தேடிப் பார்த்து கண்டுபிடிக்க முடியவில்லை. மருத்துவமனையின் முகப்பு பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண் காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில், மகன் முகமது ஆசிப்பை தூக்கிக்கொண்டு உசேனா பானு மருத்துவமனைக்குள் நுழையும் காட்சிகள் இருந்தன. ஆனால் முகமது ஆசிப் வெளியில் சென்றதற்கான எந்த காட்சியும் அதில் பதிவாகவில்லை. இது போலீஸாருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தைராய்டு பிரிவில் குழந்தை காணாமல்போன இடத்திலும் ஒரு கண்காணிப்பு கேமரா உள்ளது. ஆனால் அது பழுதாகி செயல் படாமல் இருந்ததால் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டை போலீஸாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கிருந்த பெண்களிடம் குழந்தையின் புகைப்படத்தை காட்டி நடத்தப்பட்ட விசார ணையில் பெண் ஒருவர் இந்தக் குழந்தையை அழைத்துச் சென்றதாக தெரிவித்துள்ளனர். அந்தப் பெண் யார் என்பது குறித்து போலீஸார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.