தமிழகம்

தமிழக அரசின் தீர்மானத்தை திமுக வரவேற்கிறது: ஸ்டாலின்

செய்திப்பிரிவு

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சட்டப் பேரவையில் தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானத்தை திமுக வரவேற்பதாக, அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து அவர் பேசும்போது, “தற்போது கொண்டு வரப்பட்டிருக்கும் தீர்மானத்தை திமுக சார்பில் வழிமொழிந்து வரவேற்க கடமைப்பட்டுள்ளேன். காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறப் போகிறது என்ற செய்தி வந்ததில் இருந்து அந்த மாநாடு இலங்கையில் நடைபெறக் கூடாது என்றும் அதில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்றும் திமுக தலைவர் கருணாநிதி குரல் கொடுத்து வருகிறார்.

கடந்த மார்ச் 25–ம் தேதி நடந்த திமுக செயற்குழுவிலும், ஜூலை 16-ல் நடந்த டெசோ கூட்டத்திலும் இதுபற்றி விரிவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரதமருக்கும் தலைவர் விரிவான கடிதமும் எழுதியுள்ளார்.

தமிழக அளவில் அனைவருமே இதில் ஒன்றுபட்டு குரல் கொடுப்பது ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது. இதற்கு பிறகும் தமிழர்களின் உணர்வுகளை மதிக்காமல் இலங்கையுடனான உறவை இந்தியா கைவிடாமல் இருந்தால் காமன்வெல்த் நாடுகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ராஜபக்சே அவைத் தலைவராக வந்துவிடும் நிலை ஏற்பட்டு விடும்.

எனவே ராஜபக்சே நீதி விசாரணைக்கு உட்படாமல் தப்பிக்கும் இக்கட்டான சூழ்நிலை உருவாகிவிடும். இதைக் கருத்தில் கொண்டாவது இந்தியா காமன் வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும். உலக தமிழர்கள் ஒன்று சேர்ந்து வலியுறுத்தும் இந்த கருத்துக்கு ஆதரவாக இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று சொல்லி முதல்வரின் தீர்மானத்தை வரவேற்கிறேன்” என்றார்.

இந்தத் தீர்மானத்தை பண்ருட்டி ராமச்சந்திரன் (தேமுதிக), கோபிநாத் (காங்கிரஸ்) சவுந்தரராஜன் (மார்க்சிஸ்டு), ஆறுமுகம் (இந்திய கம்யூ.), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி), பி.வி.கதிரவன் (பார்வர்டு பிளாக்), தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), மற்றும் செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி) ஆகியோரும் வரவேற்று பேசினர்.

SCROLL FOR NEXT