முன்னணி நட்சத்திரங்களின் புதுப்படம் வெளியாகிறது என்றாலே திரையரங்குகள் அனைத்தும் திருவிழா கோலம் பூணுகின்றன. பண்டிகையே வந்துவிட்டது போன்று ரசிகர்கள் கோலாகலம் அடைகின்றனர். இதுபோன்ற நிகழ்ச்சிக்கு ஏராளமாகவும், தாராளமாகவும் செலவு செய்கின்றனர். ஒரு நாள் கூத்து போல அரங்கேறும் இந்த முதல் நாள் காட்சிக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டங்கள் தேவையா?
இதுகுறித்து மக்களின் கருத்து என்ன?
ராஜேந்திரன், காவலாளி: நான் சரத்குமார் ரசிகன். பட்டாசு வெடிப்பது, பேனர் வைப்பது போன்றவற்றால் காசுதான் வீணாகிறது. குடும்பத்தில் உள்ளவர்கள் இதுபோன்று செய்யமாட்டார்கள். கல்லூரி மாணவர்கள்தான் செய்கின்றனர். ஒரு பேனர் வைக்க ரூ.15,000 வரை செலவு செய்கின்றனர். இது தேவையா? படங்களை பொழுதுபோக்குக்காகத்தான் பார்க்க வேண்டும்.
ராஜேஷ், தனியார் நிறுவன ஊழியர்: எனக்கு விஜய் ரொம்பப் பிடிக்கும். ரசிகர்கள் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால் இவ்வாறு செய்வது சரிதான். நானும் கூட 'தெறி' படத்திற்காக பாலாபிஷேகம் செய்ய எண்ணி, பால் பண்ணைக்கு சென்றேன். அங்கு அவர்கள் படும் கஷ்டத்தை பார்த்தபோது இனி அவ்வாறு செய்யவேண்டாம் என்று முடிவுசெய்துள்ளோம். எங்களால் முடிந்தவரை செலவு செய்து படம் பார்ப்பதில் எங்களுக்கு ஒரு சந்தோஷம்.
அந்தோனி, ஆட்டோ ஓட்டுநர்: எனக்கு ரஜினி என்றால் பிடிக்கும். புதுப்படம் என்றால் பார்த்துவிட வேண்டும், அதற்காக பட்டாசு வெடிப்பது, பேனர் வைப்பதால் எந்த லாபமும் இல்லை. அந்தப் பணத்தை வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு செலவு செய்தாலாவது சந்தோஷம் கிடைக்கும்.
கணேஷ், கடை வைத்திருப்பவர்: நான் தனுஷ் ரசிகன். ரசிகன் என்றால் உயிரையே கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. படம் நல்லா இருந்தால் பார்த்துவிட்டு வரவேண்டும். இதுபோன்று பாலாபிஷேகம் செய்வதெல்லாம் அவசியமில்லாதது. இது போன்று செயல்களில் நான் ஈடுபடுவதில்லை. வீட்டிற்குக் கொடுக்காமல் இப்படி வீணாக பணம் செலவு செய்வது தவறு.
அரவிந்த், பள்ளி மாணவர்: நான் விஜய் ரசிகன். இதுபோன்று பட்டாசுக்கு செலவு செய்யும் காசினை ஏழை மக்களுக்கு கொடுத்து உதவினால் அவர்கள் சந்தோஷம் அடைவார்கள். அதன் மூலம் நமக்கும் சிறிது சந்தோஷம் கிடைக்கும். நான் இவ்வாறு வீணாக செலவு செய்ததில்லை. என்னுடைய நண்பர்கள் செய்வார்கள். காசு சேர்த்து வைத்து இதுபோன்று செலவு செய்வதில் அவர்களுக்கு ஒரு சந்தோஷம்.
பசீலத், பெட்டிக்கடை வைத்திருப்பவர்: எனக்கு ரஜினிகாந்த் பிடிக்கும், அவர் ஸ்டைல் ரொம்ப பிடிக்கும். இது மாதிரி பாலாபிஷேகம் செய்வதெல்லாம் ஒரு சந்தோஷத்துக்கு தான். என்னைப் பொறுத்தவரை அது தப்பில்லை.வீட்ல கேட்டு போறது தப்பில்ல, பொதுவா 18 வயசு கடந்த பசங்க தான் இவ்வாறு செலவு செய்வாங்க.
பிருந்தா, பழக்கடை வைத்திருப்பவர்: எனக்கு எம்.ஜி.ஆர் என்றால் ரொம்பப் பிடிக்கும். நானே அந்தக் காலத்தில், எம்.ஜி.ஆர் படம் ரிலீஸ் என்றால் கற்பூரமெல்லாம் காட்டுவேன். அவர்களுக்கு பிடித்தவர்களுக்கு செய்வதில் எந்த தப்புமில்லை. ஆனால் வீட்டில் கஷ்டம் இருக்கும்போது அதை பொருட்படுத்தாம நம்ம சந்தோஷத்துக்காக நடந்துகிறது தவறு.
ரஃபீக், டெய்லர்: நான் ரஜினி ரசிகன். இந்த மாதிரி மத்தவங்கள தொந்தரவு செய்கிற வகையில் பட்டாசு வெடிப்பது, கூச்சல், ஆர்ப்பாட்டம் போடுவது தப்புதான். ரசிகனா இருக்கணுமே தவிர வெறியனா இருக்கக்கூடாது. எந்த தலைவரும் எனக்கு இவ்வாறு செய் அப்படினு சொல்வதில்லை. வீட்டிலுள்ள தாய், தகப்பனை தான் முதலில் பார்க்க வேண்டும் அதன்பிறகு தான் மற்றதெல்லாம்.
நாகம்மா, வீட்டுவேலை செய்பவர்: எனக்கு ரஜினிதான் ரொம்ப பிடிக்கும். அபிஷேகம் பன்றது, கட்-அவுட் வைப்பதெல்லாம் தப்பில்ல. அவங்க தலைவன் அப்படிங்கிற ஆர்வத்துல பண்றாங்க. இதை யார் சொன்னாலும் மாத்திக்க மாட்டங்க. என் மகனே அப்படி செய்வான், கேட்டா நான் சேர்த்து வைத்த காசு செலவு பண்றேன்னு சொல்லுவான்.
ஸ்வேதா, கல்லூரி மாணவி: எனக்கு தனுஷ் பிடிக்கும். ரோட்ல பட்டாசு வெடிக்கிறது போற வர்றவங்களை பாதிக்கும். இது மாதிரி மத்தவங்கள கஷ்டப்படுத்தி அவங்க சந்தோஷத்துக்காக பண்றது தப்பு. வீட்டுல இருக்கிற காசை எடுத்துக்கொண்டு போய் செலவு செய்வது ரொம்ப தப்பு.
பசீலத், கணேஷ், ஜெயசேகர், அரவிந்த், மணி, நாகம்மா
ஜெயசேகர், ஓய்வு பெற்றவர்: விஜய் படம்னா எனக்கு பிடிக்கும். ரசிகர்கள் ஆர்வக்கோளாறுல என்னென்னமோ பண்றாங்க. அதன் மூலமாக சங்கத்துல ஏதேனும் பதவி கிடைக்கும்னு செய்யறாங்க. உண்மையான ரசிகர்களா இருந்தா எப்படி திருட்டு விசிடி எல்லாம் வருது? வீட்டுல இருக்கிற காசை செலவு பண்ணா, வீட்டு செலவுக்கு வட்டிக்கு தான் வாங்கனும். வீட்டுல இருக்கிறவங்க வயிற்றெரிச்சல் அவங்க தலைவனுக்குத்தான் சாபம் விட வைக்கும்.
புஷ்பா, கட்டிடத் தொழிலாளி: சிவாஜி படம்னா விரும்பிப் பார்ப்பேன். வேலையில்லாத இளம் வயது பசங்கதான் பாலாபிஷேகம் பண்றது, கட்-அவுட் வைக்கிறதுன்னு பண்ணுவாங்க. எங்கள மாதிரி உழைக்கிறவங்களுக்கு அதுமாதிரி தோணாது. படம் பார்க்கிறதோட நிறுத்திக்கணும்,இப்படி தேவையில்லாம செலவு பண்ணக்கூடாது.
மணி, சட்ட மாணவர்: நான் விஜய் ரசிகன். முதல்நாளே அபிஷேகம் செய்து புதுப்படத்த வரவேற்கறது ஒரு சந்தோஷத்துக்குத்தான். அப்படி செய்யறது முக்கியம்னு நினைக்கிறவங்க பண்றாங்க. நான் அப்படி செஞ்சதில்லை.
ஷாம், பிரியாணி கடை வைத்திருப்பவர்: எனக்கு ஜீவா நடிப்பு பிடிக்கும். என்ன பொறுத்தவரை ஒரு ரசிகனா பாலபிஷேகம் பன்றது, கட்-அவுட் வைக்கிறது தப்பில்ல. நம்ம தலைவனுக்கு நாமதானே செய்யனும். நானும் அப்படி நிறையா பண்ணியிருக்கேன். ஆனா மத்தவங்கள கஷ்டபடுத்தாம நம்ம சந்தோஷத்த கொண்டாடனும்.
செல்வகுமார், காவல்துறை அதிகாரி: எனக்கு விஜய்னா பிடிக்கும். அவங்க வேலையை அவங்க பார்க்கிறாங்க, அதற்காக போய் கட்- அவுட் வைக்கிறதுலாம் தவறு. வீட்டுல ஆயிரம் கஷ்டம் இருக்கும்போது முதல் நாளே படம் பார்க்கனும்னு எந்தவொரு கட்டாயமும் இல்லை. எப்படி இருந்தாலும் அந்தப் படம் ஒரு மாதம் வரை இருக்கும். எனவே எப்பொழுது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம்.
ராஜேஷ், செல்வா, ரஃபீக், புஷ்பா, ஷ்யாம், ஆன்டனி
பிரகாஷ், வெல்டிங் ஒர்க் செய்பவர்: நான் கமல் ரசிகன், அவரோட எல்லாப் படத்தையும் பார்ப்பேன். அதற்காக அவருக்கு கட்-அவுட்லாம் வச்சதில்லை. ரசிகன்னா மனசோட வைச்சுக்கனும், படம் பார்க்கனும் அவ்வளவுதான். முதல்ல நம்ப குடும்பம் அதன் பின்பு தான் மற்றதெல்லாம்.
நரேந்திரன், தனியார் நிறுவன ஊழியர்: நான் ரஜினி ரசிகன். இந்த மாதிரி பண்றதுனால அவங்க சந்தோஷப்படறாங்க அதனால தப்பில்லனு தோணுது. தீபாவளி, பொங்கல் நேரத்துல ரிலீஸ் ஆச்சுனா அது மறக்கமுடியாத ஒரு நிகழ்ச்சியா மாறிவிடுகிறது. அதனால காசு செலவு பத்தி யோசிக்கமுடியாது. நான் கூட 'கபாலி' படத்துக்காக என்னுடைய விடுப்பை மூன்று முறை ஒத்திவைத்துள்ளேன். வெற்றியடையும் என பெரிதும் எதிர்பார்க்கிறோம்.
ஆண்டனி பிரின்ஸ், கல்லூரி மாணவர்: நான் எப்பவுமே தலைவர் ரசிகன்தான். இந்த மாதிரி பண்றதுனால அவங்களுக்கு ஒரு சந்தோஷம் தான் அதனால என்ன பொறுத்தவரை இது தப்பில்ல. நான் இதுவரைக்கும் அப்படி செய்ததில்லை, நண்பர்கள் செய்து பார்த்திருக்கிறேன். வீட்ல கஷ்டமா இருக்கும்போது இதுபோன்று டிக்கெட்டுக்கு செலவு செய்வது தவறுதான். 'கபாலி' படம் ரொம்ப பெரிய எதிர்பார்ப்போட இருக்கு. படத்துக்காக காத்திருக்கோம்.