தமிழகம்

தமிழக அரசியல் சண்டைகளால் வறண்டது பவானி?- தேக்குவட்டை அணையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேதனை

செய்திப்பிரிவு

பவானி ஆற்றில் கட்டப்படும் தடுப்பணைகளால் தமிழகப் பகுதியில் பாயும் பவானி ஆறு வறண்டுபோகத் தொடங்கியுள்ளது. தமிழக அரசியல் சண்டைகளால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

கேரளாவின் அட்டப்பாடி பிரதேசத்தில் தேக்குவட்டை பகுதியில் பவானிக்கு குறுக்கே 100 மீட்டர் நீளம், 5 மீட்டர் உயரத்தில் தடுப்பணை கட்டியுள்ளது கேரள அரசு. இதேபோல, மேலும் 5 அணைகளைக் கட்டத் திட்டமிட்டுள்ளது குறித்து ‘தி இந்து’வில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: புதிய அணைகள் கட்டினால் தமிழகத்துக்கு தண்ணீர் வராது. எனவே, இந்தப் பணிகளை கேரள அரசு உடனே நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு கட்சிகள், விவசாய சங்கங்கள் போராட்டங்கள் நடத்தின. இது தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு மார்ச் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடந்த அரசியல் மோதல்கள், இந்தப் பிரச்சினையை வெளியில் தெரியாமல் செய்துவிட்டன. ஜெயலலிதா இறப்பதற்கு முன்பே 6 அணைகளுக்கான பணியைத் தொடங்கியது கேரள அரசு. முதல் அணையின் கட்டுமானப் பணிகள் தொடங்கியபோதே தமிழகத்தில் போராட்டங்கள் தொடங்கின. இதனால், தேக்குவட்டை பகுதியில் அணையின் ஒரு பகுதி பணியை முடித்த ஒப்பந்ததாரர், ‘அணை பணிகள் பாதியில் நின்றால், கட்டுமானப் பணிக்கான பில் தொகை கிடைக்காது’ என்று கருதி, கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்தினார்.

அதேசமயம், மஞ்சிக்கண்டி கிராமத்தில் அணை கட்டும் பணியை டென்டர் எடுத்த ஒப்பந்ததாரர், பணியைத் தொடங்கத் தயங்கினார். தமிழகத்தில் போராட்டங்கள் பெரிய அளவில் ஏற்பட்டு, நீதிமன்றம் தடையாணை பிறப்பித்தால் சிக்கலாகி விடும் எனக் கருதி, அவர் கட்டுமானப் பணியை ஒத்திவைத்துள்ளார்.

தமிழகப் பகுதியான ஆனைகட்டியில் கடந்த 29-ம் தேதி திமுக மற்றும் 20-க்கும் மேற்பட்ட அமைப்புகள் முற்றுகைப் போராட்டம் நடத்தின.

அப்போது, தமிழகத்தில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா இடையிலான அரசியல் மோதல்கள் உச்சகட்டத்தை அடைந்ததால், அணை பிரச்சினை இரு மாநில அரசுகளின் கவனத்தை பெரிய அளவில் ஈர்க்கவில்லை. அதனால் மஞ்சிக்கண்டி அணைப் பணிகள் தொடங்கப்பட்டன. மேலும், தேக்குவட்டையில் அணை பணிகள் முடிவடைந்து, சுமார் 2 கிலோமீட்டர் வரை தண்ணீர் தேங்கியது. அப்பகுதியில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தது. ஆனால், அணையின் கீழ் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. தற்போது, முற்றிலுமாக நீர்வரத்து தடைபட்டுள்ளது.

தேக்குவட்டையில் உருவாகியுள்ள புதிய அணைக்கு 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாவடியூர் பாலத்தில்தான் அட்டப்பாடியின் அகழி, புதூர் ஊராட்சிகளின் எல்லைகள் உள்ளன. இங்கே கோடைகாலத்தில்கூட பவானி வறண்டது கிடையாது. அப்போது தேக்குவட்டை, மஞ்சிக்கண்டி பகுதியில் ஆற்றுக்கு குறுக்கே விவசாயிகள் மணல் மூட்டைகளை அடுக்கிவைத்து, மோட்டார் பம்ப்செட் மூலம் நிலத்துக்கு தண்ணீர் கொண்டுசெல்வர். அப்போது, அணையின் கீழ் உள்ள விவசாயிகள் போராட்டம் நடத்துவார்கள்.

இதையடுத்து, தேக்குவட்டை, மஞ்சிக்கண்டி பகுதியில் வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகளை அதிகாரிகள் அகற்றுவார்கள். ஆனால், தற்போது தேக்குவட்டை அணை கட்டப்பட்ட பின் சாவடியூர் பாலத்துக்கு கீழ் உள்ள ஆற்றுப் பகுதி பாலைவனம்போல காட்சியளிக்கிறது.

தேக்குவட்டை கிராமத்திலிருந்து பவானி பாயும் கிராமங்களான சாலையூர், எலச்சி வழி, சாவடியூர், முதலைத்துறை, காரத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வறண்டுவிட்டன. இதனால், கேரளப் பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்களே பாதிக்கப்பட்டுள்ளன.

அங்கேயே அந்த நிலை என்றால், முள்ளி தாண்டியுள்ள தமிழக கிராமங்களின் நிலை இன்னும் மோசமாக உள்ளது என்றனர்.

60 சதவீதம் தமிழர்கள்

சாவடியூர் விவசாயிகள் ‘தி இந்து’விடம் கூறும்போது, “தேக்குவட்டைக்கு மேலிருந்து பவானி செல்லும் பகுதியில் வசிப்போரில் 60 சதவீதம் தமிழர்கள். சாவடியூர் சுற்றுவட்டாரப் பகுதியில் கோவையிலிருந்து சென்றவர்களே அதிகம் உள்ளனர். இங்கு வாழை, தென்னை, பாக்கு மற்றும் காய்கறிகள், பூக்கள் விளைவிக்கப்படுகின்றன. காய்கறிகள், தேங்காய், வாழைத்தார் போன்றவை கோவை, மேட்டுப்பாளையம் மார்கெட்டுக்கும், பாக்கு தொண்டாமுத்தூருக்கும், பூக்கள் கோவை மார்க்கெட்டுக்கும் கொண்டுசெல்லப்படுகின்றன. மல்பெரி இலைகள்கூட கோவை பட்டு வளர்ச்சி மையத்துக்குத்தான் அனுப்பப்படுகிறது.

வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் நிலவும் வறட்சி, இந்த ஆண்டு 2 மாதங்களுக்கு முன்பே வந்துவிட்டது. முன்பெல்லாம், ஆற்றின் நடுவே வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகளை அகற்றச் சென்றால், அது இங்குள்ள 2 ஊர் விவசாயிகளுக்கான தண்ணீர் பிரச்சினையாகத்தான் அதிகாரிகள் கருதினர். ஆனால், தற்போது பிரச்சினை செய்தால், தமிழ்நாட்டின் தூண்டுதல், அணைக்கான பிரச்சினை என்று முத்திரை குத்தி விடுவார்களோ என்ற அச்சத்தில், விவசாயிகள் தயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

சாவடியூருக்கு மேலே அணைகள் கட்டுவதால் இங்குள்ள ஊர்கள் பாதிக்கப்படும் என்பது நாங்கள் அறிந்தததுதான். ஆனால், குறைந்த அளவில் உள்ள எங்களது கோரிக்கை எடுபடாது. எனவேதான், தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களால் இங்கு அணைகள் கட்டப்படுவது தடுத்து நிறுத்தப்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அங்குள்ள அரசியல் சூழ்நிலைகளால் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. பவானி வறண்டு கிடப்பதற்குக் காரணம் தமிழக அரசியல் சூழலே. திட்டமிட்டபடி 6 அணைகளும் கட்டிமுடிக்கப்பட்டால், மழைக்காலங்களில் மட்டுமே ஆற்றைக் காணமுடியும் என்ற நிலை உருவாகும்” என்றனர்.

சாவடியூர் உள்ளிட்ட கிராமங்களின் நிலை குறித்து தேக்குவட்டை, மஞ்சிக்கண்டி கிராம விவசாயிகள் கூறும்போது, “மழை இல்லாவிட்டால் தேக்குவட்டை அணைக்கு கீழே தண்ணீர் செல்வது தற்போதைக்கு சிரமம்தான் என்பதை, இப்போது இங்கு தேங்கியுள்ள தண்ணீரைப் பார்த்தாலே தெரிகிறது. அணைக்கு கீழ் பகுதியில் உள்ள விவசாயிகள் எப்போது பிரச்சினை கிளப்புவார்களோ என்ற அச்சம் கேரள வருவாய்த் துறை மற்றும் வேளாண் அதிகாரிகளுக்கு உள்ளது. இரு வாரங்களுக்கு முன்புதான் வருவாய்த் துறை அதிகாரிகள் சிலர் இங்கு வந்து, யாரும் மோட்டார் பம்ப்செட் மூலம் தண்ணீரை விவசாயத்துக்கு எடுக்க வேண்டாம் என்று எச்சரித்தனர். சில நாட்களுக்கு முன்பு வேளாண் துறை அதிகாரிகள் வந்து, மோட்டார் பம்ப்செட் அமைத்துள்ள விவசாயிகள் குறித்து விசாரித்தனர்.

மேலும், பம்ப்செட் பயன்படுத்த வேண்டும். தண்ணீர் குறைவாக உள்ளதால், குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டியுள்ளது. தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துங்கள். தெளிப்பான்கள் மூலம்கூட பாசனம் செய்யவேண்டாம். சொட்டு நீர்ப் பாசனத்துக்கு மாறுங்கள் என்று தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். இங்கே அணைகள் கட்டுவதற்கு, இங்குள்ள விவசாயிகளே பிரச்சினை எழுப்பக்கூடும் என்ற அச்சம்கூட இதற்குக் காரணமாக இருக்கலாம்” என்றனர்.

SCROLL FOR NEXT