1980-க்குப் பிறகு முதல்முறையாக ப.சிதம்பரம் இல்லாத தேர்தலை சந்திக்கிறது சிவகங்கை தேர்தல் களம். இதனால் 30 ஆண்டுகளாக தக்கவைத்திருந்த வி.ஐ.பி. தொகுதி என்ற அந்தஸ்தை இழக்கிறது சிவகங்கை சீமை.
சிவகங்கையில் தொடர்ந்து 8 முறை போட்டியிட்டு 7 முறை வெற்றிபெற்று 23 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அமைச்சராகவும் வலம் வந்தவர் ப.சிதம்பரம். 1984-ல் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக முதல்முறையாக நாடாளுமன்றத் தேர்தல் களத் துக்கு வந்த சிதம்பரம், திமுக வேட்பாளர் தா.கிருட்டிணனை தோற்கடித்து நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்தவர், அடுத்த 10 மாதங்களில் பணியாளர் நலன் மற்றும் மக்கள் குறைதீர்ப்பு துறை அமைச்சரானார். அடுத்த சில மாதங்களில் உள்துறை இணை அமைச்சரானார்.
1989-ல் மீண்டும் அதே கூட்டணியில் போட்டியிட்டு தி.மு.க-வின் ஆ.கணேசனை வீழ்த்தி எம்.பி. ஆனார். 1991-ல் அதிமுக கூட்டணியில் திமுக-வின் காசிநாதனை வென்ற சிதம்பரத் துக்கு தனிப் பொறுப்புடன் கூடிய வர்த்தக அமைச்சர் பதவி தரப்பட்டது. ஆனால், இடை யில் ஃபேர் குரோத் ஊழல் சர்ச்சையில் சிக்கியதால் பதவி விலகியவர், ஒன்றரை வருடங்கள் கழித்து மீண்டும் வர்த்தக அமைச் சரானார்.
1996-ல் தமாகா - திமுக கூட்டணியில் போட்டியிட்டு காங்கிரஸின் கௌரிசங்கரை வீழ்த்தினார். அந்தத் தேர்தலில் சிதம்பரத்தின் வாக்கு வித்தியாசம் மட்டுமே 2,47,302 ஓட்டுகள். அப்போது ஐ.கே. குஜ்ரால் அமைச்சரவையில் இரண்டாண்டு காலம் நிதியமைச்சராக இருந்தார்.
1998-ல் மீண்டும் தமாகா - காங்கிரஸ் கூட்டணியில் போட்டி யிட்டு அதிமுக-வின் காளிமுத்துவை வீழ்த்தினார் சிதம்பரம். 1999-ல் தமாகா- விடுதலைச் சிறுத்தை கள் கூட்டணியில் போட்டியிட்டு காங்கிரஸின் சுதர்சன நாச்சியப் பனிடம் தோற்றார்.
அப்போது சிதம்பரத்துக்கு கிடைத்த ஓட்டுகள் சுமார் 1.26 லட்சம். இடையில், மூப்பனாருடன் முறைத்துக் கொண்டு 2001 சட்டமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையை தொடங்கி, திமுக-வுடன் கூட்டணி வைத்தார் சிதம்பரம்.
அந்தத் தேர்தலில் அவரது கட்சிக்கு புரசைவாக்கம், காட்டு மன்னார் கோவில் தொகுதி களை ஒதுக்கியது திமுக. இரண்டி லுமே சிதம்பரம் கட்சி வேட்பாளர் களான புரசை ரங்கநாதன், வள்ளல் பெருமான் வெற்றி பெற்றனர். தொடர்ந்து தனது கட்சியை நடத்திவந்த சிதம்பரம், 2004 நாடாளுமன்றத் தேர்தலின்போது ஓசைப்படாமல் தான் மட்டும் காங்கிரஸில் ஐக்கியமாகி கை சின்ன வேட்பாளரானார். அந்தத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நின்று அதிமுக வேட் பாளர் கருப்பையாவை வீழ்த்தி நிதியமைச்சராகவும் வந்தார்.
மூன்றரை ஆண்டுகள் அந்தப் பொறுப்பில் இருந்தவர், மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு, நிதியை பிரணாப் முகர்ஜியிடம் ஒப்படைத்துவிட்டு, உள்துறைக்கு அமைச்சரானார். 2009-ல் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் அதிமுக-வின் ராஜகண்ணப்பனிடம் போராடி 3,354 ஓட்டு வித்தியாசத்தில் தொகுதியை தக்கவைத்த சிதம்பரம், மீண்டும் நிதியமைச்சரானார்.
இந்தத் தேர்தலில் ப.சிதம்பரம் தனது தேர்தல் பயணத்தை நிறுத்திக் கொண்டு, ’’நானே நிற்பதாக நினைத்து கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்’’ என்று மகனுக்காக வாக்கு கேட்டு வருகிறார்.