சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் பல உறுப்பினர்கள் நேற்று பேச ஆர்வம் காட்டியதால், கூட்டம் தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்புகள் அடுத்த 15 நாட்களில் வெளிவர உள்ளன. அதனால் மாநகராட்சி மேயர் மற்றும் மன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் கடந்த இரு நாட்களாக இறுதி மன்றக் கூட்டம் நடைபெற்று வருகிறது. வழக்கமாக ஒரு நாள் மட்டுமே மன்றக் கூட்டம் நடைபெறும். ஆனால், இது இறுதிக் கூட்டம் என்பதால், உறுப்பினர்கள் பலருக்கும் பேச வாய்ப்பளிக்கும் வகையில் இரு நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டது.
அவ்வாறு நேற்று முன்தினம் தொடங்கிய கூட்டம், நேற்றும் நடைபெற்றது. அதில், கல்லூரி மாணவர்கள் பிரிந்துசெல்வது போன்று, “பாடித் திரிந்த பறவைகளே.. பறந்து செல்கின்றோம்” என்பன உள்ளிட்ட பல்வேறு திரைப்பட பாடல்களை பாடி உறுப்பினர்கள் கண்கலங்கினர்.
பல உறுப்பினர்கள் ஆர்வமாக தமக்கும் பேச வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரினர். சில உறுப்பினர்கள் சனிக்கிழமையும் கூட்டத்தை நடத்த வேண்டுகோள் விடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக 3-வது நாளாக இன்றும் மாமன்ற கூட்டம் நடைபெறுகிறது. கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்குகிறது. பின்னர் பிற்பகலில் அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து புகைப்படம் எடுக்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது.