தமிழகம்

பெட்ரோல் ஊற்றி பெண் எரித்துக் கொலை - தீயில் பொசுங்கிய தவறான உறவு

செய்திப்பிரிவு

பெண்ணை நடுரோட்டில் தீ வைத்து எரித்துக் கொன்றவர் தானும் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை அமைந்தகரை பார்வதிபுரம் முதலாவது தெருவைச் சேர்ந்தவர் டால்டா குமார் (45). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவர் வீட்டின் மாடியில் கணவரை பிரிந்து சரஸ்வதி (37) என்ற பெண் வசித்து வந்தார்.

இந்நிலையில் குமாருக்கும், சரஸ்வதிக்கும் இடையே தவறான உறவு ஏற்பட்டது. இதையறிந்து இரு வீட்டிலும் பிரச்சினை ஏற்பட்டது. சரஸ்வதியின் உறவினர்கள் மீண்டும் அவரை கணவருடன் சேர்த்து வைத்தனர்.

ஆனால் சரஸ்வதி மீண்டும் பிரிந்து வந்து அரும்பாக்கத்தில் ஒரு வீட்டில் தனியாக வசித்தார்.

இந்நிலையில் அரும்பாக்கத்தில் வேறொருவருடன் சரஸ்வதிக்கு தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த குமார் கடும் ஆத்திரம் அடைந்தார். சரஸ்வதியிடம் கடுமையாக வாக்குவாதத்திலும் ஈடுபட்டிருக்கிறார்.

திங்கள்கிழமை பிற்பகலில் அண்ணா நகர் இ பிளாக் முதல் தெருவில் மோட்டார் சைக்கிளில் சரஸ்வதி வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த குமார் சரஸ்வதியை தடுத்து நிறுத்தினார். அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கடும் ஆத்திரம் அடைந்த குமார் ஏற்கெனவே தயாராக கொண்டு வந்திருந்த பெட்ரோலை சரஸ்வதி மீது ஊற்றி தீ வைத்தார். பின்னர் தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

அண்ணா நகர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.

'ஆணாதிக்க வெறிதான் வன்முறையாக வெடிக்கிறது'

காதலிலும் அது தொடர்பான சர்ச்சைகளிலும் பெண் மட்டுமே குற்றவாளியாக்கப்படுகிறாள். கட்டற்ற வன்முறையும் அவள் மீதே கட்டவிழ்த்துவிடப்படுகிறது. ஐந்தறிவு விலங்குகளிடம்கூட காட்டாத வன்முறையைப் பெண்கள் மீது பிரயோகிக்கிறார்கள்.

இப்படி பலியாகிற பெண்களின் பட்டியலில் பெட்ரோலில் பொசுங்கிய சரஸ்வதியின் பெயரும் சேர்ந்திருக்கிறது. பெண்கள் மீது செலுத்தப்படும் இந்த வன்முறைக்குப் பின்னால் இருக்கும் மனநிலை என்ன? விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் அபிலாஷா.

''பெண்கள் மீது நிகழ்த்தப்படும் இதுபோன்ற வன்முறைகளுக்கு முதல் காரணம் ஆண் என்கிற அகந்தைதான். தான் கேட்டு ஒரு பெண் மறுப்பதா என்ற நினைப்புதான் அவனை வன்முறையின் எல்லை வரை அழைத்துச் செல்கிறது. தன்னை நிராகரித்தவளுக்கு வலியும் வேதனையும் நிச்சயம் ஏற்பட வேண்டும் என நினைக்கிறான். எந்த அழகு தன்னை ஈர்த்ததோ அதை அழித்துவிட்டால், தான் நிராகரிக்கப்பட்ட கணக்கு நேர்செய்யப்படும் என நினைக்கிறான். அந்த அழகால் இன்னொரு வனைக் கவர்வதும் தடுக்கப்படும் என்று முட்டா ள்தனமாகச் சிந்திக்கிறான். அதன் விளைவுதான் பெண்கள் மீது ஆசிட் வீசுவதும், பெட்ரோல் ஊற்றி எரிப்பதும்.

இதுவே திருமணம் தாண்டிய உறவுகளில் வன்முறையின் சதவீதம் கூடுதலாக இருக்க காரணம். இவர்களிடம் மன ரீதியான பிணைப்பைவிட உடல்ரீதியான கவர்ச்சி அதிகமாக இருப்பதால், தனக்குக் கிடைக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற நினைப்பில் அவளை அடியோடு அழிக்க நினைப்பார்கள். சரஸ்வதியின் முடிவும் அப்படித்தான் நேர்ந்திருக்கிறது.

தனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்துக்கு வடிகால் தேடியும் சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதுண்டு. தன்னை நிராகரித்தவளை கஷ்ட ப்படுத்துவதன் மூலம் தங்கள் காயத்தை ஆற்றிக்கொள்ள நினை க்கிறார்கள்.

ஊடகங்களுக்கும் நண்பர்களுக்கும் கூட இதில் பங்கு உண்டு. ஒரு பெண்ணால் நிராகரிக்கப்படுகிற கதாநா யகன், நண்பர்களோடு சேர்ந்து சதியாலோசனையில் ஈடுபடுவதைப் பார்க்கிறவர்கள், தாங்களும் கதாநாயகர்களாக உருவெடுக்க இதுபோன்ற செயல்களில் இறங்குகின்றனர்.

ஒரு பெண் தன்னை நிராகரிப்பதும், விட்டு விலகுவதும் தன் தன்மானத்தின் மீது விழுகிற மிகப்பெரிய அடியாகவே ஆண் நினைக்கிறான். உள்ளுக்குள் இருக்கும் அந்த ஆணாதிக்க வெறிதான், இப்படி வன்முறையாக வெடிக்கிறது”.

SCROLL FOR NEXT