சென்னை அயனாவரத்தில் போலீஸ் வேன் மோதி பலியான மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், "சென்னை, அயனாவரம், பனந்தோப்பு ரயில்வே காலனி, 10-வது தெரு அருகே 5.6.2016 அன்று காவல் துறை வாகனம் மோதியதில், அயனாவரத்தைச் சேர்ந்த விக்டர் என்பவரின் மகன் செல்வன் ராம்குமார் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயும்; ஓட்டேரியைச் சேர்ந்த டேவிட் என்பவரின் மகன் செல்வன் சாலமன் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
இந்த விபத்தில் உயிரிழந்த செல்வன் ராம்குமார் மற்றும் செல்வன் சாலமன் ஆகிய இருவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.