தமிழகம்

கருணை அடிப்படை வேலைக்கான மருத்துவ விதிகளைத் திருத்த மாநகராட்சி திட்டம்

செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சியில் கருணை அடிப்படையில் பணி வழங்குவதற்காக பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கோப்புகள் மீது தீர்வு காண மாநகராட்சி திட்டமிட்டிருந்தது.

அக்கோப்புகள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், பயனாளிகளுக்கு வயதை நிர்ணயிப் பதற்கான கல்விச் சான்று அல்லது பிறப்புச் சான்று இல்லாததால், அவர்கள் பணி ஓய்வு காலத்தை கணக்கிட முடியவில்லை.

அதனால் அவர்களுக்கு பணி வழங்குவதற்கான கோப்புகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது தெரியவந்தது. இதற்கு தீர்வு காண, மருத்துவர் வழங்கும் வயது நிர்ணய சான்று அடிப்படையில் பணி வழங்க மாநகராட்சி தீர்மானித்தது. ஓட்டுநர் போன்ற பணிக்கு கருணை அடிப்படையில் நியமிக்கப்படும்போது, ரத்தப் பரிசோதனை செய்து, அதில் ஆல்கஹால் மூலக்கூறு (எத்தனால்) இருப்பது தெரியவந்தால் அவர் களுக்கு ஓட்டுநர் பணி வழங்கக்கூடாது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் அண்மையில் நடந்த மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இனி வரும் காலத்தில் பிறப்பு மற்றும் கல்விச் சான்று இல்லாத பட்சத்தில் மருத்துவ அதிகாரியிடம் வயது நிர்ணயச் சான்று பெற்று, அதன் அடிப்படையில், கருணை அடிப்படையில் பணி வழங்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே பக்கத்தில், ரத்த மாதிரியின் அடிப்படையில் வயது நிர்ணயம் செய்து மருத்துவர் அளிக்கும் சான்றின் அடிப்படையில் இனிவரும் காலங்களில் கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ரத்த மாதிரி அடிப்படையில் வயது நிர்ணயம் சாத்தியமா என்று மாநக ராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, “தீர்மானத்தில் பிழை ஏற்பட்டுள்ளது. இனி வரும் காலத்தில், மருத்துவ போர்டின் அனுமதி, எக்ஸ் ரே, ரத்தத்தில் ஆல்கஹால் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் கருணை அடிப்படையில் வேலை வழங்கும் வகையில் தீர்மானத்தை திருத்த திட்டமிட்டிருக்கிறோம்” என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT