அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்பி மீது தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் ஒரு புகார் தெரிவிக்கப்பட் டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள நொச்சிக்குளத்தை சேர்ந்தவர் காசி ஈஸ்வரன்(36). கட்டிட மேஸ்திரியான இவர், நேற்று முன்தினம் இரவு சாத்தான்குளம் டிஎஸ்பி கண்ணனிடம் அளித்துள்ள புகார் மனு விபரம்:
தூத்துக்குடி மாவட்டம், நாலுமாவடி அய்யா கோயிலுக்கு தனது சொந்த செலவில் மண்டபம் கட்டி கொடுக்க இருப்பதாக கூறி, அந்தப் பணியை சசிகலா புஷ்பா எம்பி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எனக்கு தந்தார். ரூ.2.50 லட்சம் பேசி, முன்பணமாக ரூ. 20 ஆயிரம் தந்தார். மீதி பணத்தை வேலை முடிந்த பின் தருவதாகக் கூறினார். ஆனால், அந்தப் பணத்தை தரவில்லை.
எனது சுமை ஆட்டோவை தங்கள் தோட்டத்து வேலைக்கு தேவை என, சசிகலா புஷ்பாவின் தந்தை தியாகராஜன் வாடகைக்கு வாங்கினார். வாடகையும் தரவில்லை, சுமை ஆட்டோவையும் திருப்பித் தரவில்லை. அதன் நம்பரை மாற்றி தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி மாதம் சசிகலா புஷ்பா எம்பி வீட்டுக்குச் சென்று, தரவேண்டிய பாக்கியை கேட்டேன். ஆனால் அவர், ஜாதி பெயரைச் சொல்லி திட்டி அனுப்பிவிட்டார். எனக்கு தர வேண்டிய சம்பள பாக்கி ரூ.2.30 லட்சத்தையும், சுமை ஆட்டோவையும் அபகரித்து, ஜாதியைச் சொல்லி திட்டி மிரட்டிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.