தமிழகம்

விஜயபாஸ்கர் - முதல்வர் - பேரவை செயலர் சந்திப்பு: நீட் மட்டுமா?

செய்திப்பிரிவு

தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் முதல்வர் பழனிசாமி, சட்டப்பேரவை செயலர் ஜமாலுதீன் ஆகியோரை இன்று (வியாழக்கிழமை) காலை சந்தித்தார்.

முதல்வருடனான சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர், நீட் தேர்வு சட்ட மசோதா தொடர்பாக ஆலோசித்தததாகவும், மருத்துவ பட்டமேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீட்டு கோரி சென்னையில் அரசு டாக்டர்கள் நடத்திவரும் தர்ணா, உண்ணாவிரதம் குறித்தும் ஆலோசித்ததாகவும் தெரிவித்தார்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் மருத்துவ பட்ட மேற்படிப்புகளில் சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் இருந்து (நீட்) தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் வகையில் சட்டம் இயற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்ட மசோதா கடந்த ஜனவரி மாதம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வருடனான சந்திப்பைத் தொடர்ந்து சட்டப்பேரவைச் செயலர் ஜமாலதீனையும் விஜயபாஸ்கர் சந்தித்தார்.

நீட் மட்டுமா?

பொறுப்பில் இருக்கும் ஓர் அமைச்சரோ அல்லது சட்டப்பேரவை உறுப்பினரோ வருமான வரித்துறை சோதனைக்கு உட்படும்போது அமைச்சர் என்ற முறையில் முதல்வரிடமும் சட்டப்பேரவை உறுப்பினர் என்ற அடிப்படையில் சட்டப்பேரவைச் செயலர் வாயிலாக சபாநாயகருக்கும் விளக்கம் அளிக்க வேண்டும் என்பது விதி.

அண்மையில் தனது வீட்டில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்ற பிறகு முதல் முறையாக சட்டப்பேரவை செயலாளரை விஜயபாஸ்கர் சந்தித்துள்ளதால், அது குறித்தும் அவர் முறைப்படி விளக்கம் அளித்திருக்கலாம் என்று தகவலறிந்த வட்டாரங்களில் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT