தமிழகம்

ஏற்காடு எம்.எல்.ஏ.வாக சரோஜா பதவியேற்றார்

செய்திப்பிரிவு

ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் சரோஜா, எம்.எல்.ஏ.வாக திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு முதல்வர் ஜெயலலிதா இனிப்பு ஊட்டிவிட்டு வாழ்த்து தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் பி.சரோஜா, 1,42,771 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவர், திமுக வேட்பாளர் மாறனைவிட 78,116 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார்.

வெற்றிச் சான்றிதழுடன் சென்னை வந்த சரோஜா, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெற்றார்.

பின்னர், பகல் 12.36 மணிக்கு சட்டசபை வளாகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் எம்.எல்.ஏ.வாக சரோஜா பதவியேற்றுக் கொண்டார்.

அவருக்கு சபாநாயகர் பி.தனபால் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். பதவியேற்றதும் முதல்வரின் காலில் விழுந்து சரோஜா ஆசிபெற்றார். அவருக்கு முதல்வர் ஜெயலலிதா இனிப்பு ஊட்டிவிட்டு வாழ்த்து தெரிவித்தார். பதவியேற்பு நிகழ்ச்சியில் அனைத்து அமைச்சர்கள், சட்டப்பேரவை செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT