உயர் நீதிமன்ற முற்றுகை போராட்டத்தின்போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தி யதாக கைது செய்யப்பட்ட 5 வழக்கறிஞர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப் பட்டன.
வழக்கறிஞர்கள் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங் களை வாபஸ் பெறக்கோரி கடந்த 25-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தை சுற்றிலும் வழக்கறிஞர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அப்போது சில வழக்கறிஞர்கள் இரும்பு தடுப்புகளை சேதப்படுத்தினர்.
இந்நிலையில், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத் தியதாகவும், போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் ஜார்ஜ் டவுன் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் கருணாகரன், அசோக்குமார், ஓம்பிரகாஷ், கிஷோர், யாசர் அராபத் ஆகிய 5 பேரை நள்ளிரவில் கைது செய்த போலீஸார், அதிகாலையில் குற்றவியல் நடுவர் முன்பாக ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இவர்கள் 5 பேரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, 5 பேர் சார்பிலும் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ‘‘மனுதாரர்கள் நீதித்துறையின் மாண்புக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக செயல்பட்டதால் அவர்களது ஜாமீன் மனுக்களை ஏற்க முடியாது’’ எனக்கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.