மது போதையால்தான் எனது கணவர் குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக, வழிப்பறியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட கண்ணனின் மனைவி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் குடிசை பகுதியைச் சேர்ந்தவர் ஆசிரியை நந்தினி (24). கடந்த 4-ம் தேதி இரவு இவரிடம் நடந்த வழிப்பறி முயற்சியில் பரிதாபமாக உயிரிழந்தார். நந்தினியின் மோட்டார் சைக்கிள் மோதியதில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த சாகர் என்பவரும் உயிரிழந்தார். நந்தினியின் உறவினர் நஜ்ஜூ என்ற கல்லூரி மாணவி படுகாயம் அடைந்தார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நந்தினியிடம் பணம் பறித்த கொள்ளையன் கண்ணனை பொதுமக்கள் பிடித்து அடித்தனர். பட்டினப்பாக்கம் போலீஸார் கண்ணனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். நேற்று ஊடகங்களில் இவரது பெயர் கருணாகரன் என்று வெளியானது. ஆனால் அவரது உண்மையான பெயர் கண்ணன் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
டீக்கடை நடத்திய கண்ணன்
வழிப்பறியில் ஈடுபட்டு 2 பேர் இறப்பதற்கு காரணமாக இருந்த சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்த கண்ணனுக்கு ரீனா என்ற மனைவியும், 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கண்ணன் 17 வயதில் காதலித்து திருமணம் செய்து கொண்டார். கண்ணனின் மனைவி ரீனா கூறும்போது, "2001-ம் ஆண்டு எங்களுக்கு திருமணம் நடந்தது. அப்போதும் கண்ணன் தவறான செயல்களை செய்து சிறைக்கு சென்றதால் அவரை விட்டு பிரிந்து தனியாக சென்று விட்டேன். இந்நிலையில் 2009-ம் ஆண்டு என்னிடம் வந்து பேசி, இனிமேல் தவறு செய்ய மாட்டேன் என்று உறுதி அளித்தார். போலீஸ் உயர் அதிகாரிகளை சந்தித்து நல்ல முறையில் வாழ்வதாக எழுதி கொடுத்துவிட்டு வந்தோம். புளியந்தோப்பில் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்தோம்.
வீட்டருகே ஒரு டீக்கடை வைத்து வியாபாரம் செய்தார். அவரை ஒருபோதும் தனியாக வெளியே விடமாட்டேன். அருகே கடைக்கு செல்வதாக இருந்தால் கூட நானும் உடன் செல்வேன். தவறு செய்யாமல் இருந்தபோது கூட போலீஸார் வந்து அடிக்கடி இவரை அழைத்து சென்று சம்மந்தம் இல்லாத வழக்குகளை போட்டு சிறையில் அடைத்துவிடு வார்கள். ஒருமுறை அப்படி அழைத்து சென்றபோதுதான் போலீஸ் அதிகாரி ஒருவர் உண் மையை அறிந்து போலீஸாரை கண்டித்தார். அதுமுதல் அவரை தேவையில்லாமல் கைது செய்ய மாட்டார்கள். போலீஸார் அடிக்கடி போன் செய்து கண்ணன் எப்படி இருக்கிறான் என்று என்னிடம் விசாரிப்பார்கள்.
உண்மையில் அவரது சுபாவம் இது கிடையாது. ரொம்ப இரக்க குணம் உடையவர். சாலையில் பிச்சையெடுக்கும் குழந்தைகளுக்கு சாப்பாடு வாங்கி கொடுப்பார். முடியாவிட்டால் பணம் கொடுப்பார். யார் உதவி கேட்டாலும் உடனே செய்வார். சென்னையில் மழை வெள்ளம் வந்தபோது வீட்டில் ஒரு நாய்க்கு காலில் அடிபட்டு உடைந்து விட்டது. அந்த நாயை தினமும் வேப்பேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருந்துபோட்டு வந்தார். இப்போது நாய் நன்றாக நடக்கிறது. வீட்டில் எங்கள் எல்லோ ரிடமும் பாசமாக இருப்பார்.
ஆனால் மது குடித்து விட்டால் மட்டும் மொத்தமாக மாறிவிடுவார். அவர் என்ன செய்கிறார் என்பது அவருக்கே தெரியாது. அவர் செய்த தவறுகள் அனைத்தும் மது குடித்தபோது நடந்தவைதான். தற்போது நடந்த சம்பவத்திலும் மது குடித்து விட்டுதான் செய்துள்ளார்.
அவர் செய்த குற்றத்தால் நாங்கள் தண்டனை அனுபவித்து வருகிறோம். குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை. 2 பேர் இறந்ததை டி.வி.யில் பார்த்த போது எங்களுக்கு அழுகை வந்து விட்டது. அவர்களின் வேத னையை நினைத்து எங்களால் இப்போது வரை சாப்பிட முடிய வில்லை. எனக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது. ஒரு குழந் தையை இழந்து வாடும் பெற்றோரின் வேதனையை நினைத்தாலே அழுகை வந்து விடுகிறது" என்றார்.
கண்ணனின் அக்கா தங்கமணி கூறும்போது, "சைக்கிள் திருடியதற்காக 15 வயதில் கண்ணனை போலீஸார் முதன் முதலில் கைது செய்தனர். அப்போது அவனை சிறுவர் இல்லத்தில் சேர்க்காமல் போலீ ஸார் சிறையில் அடைத்தனர். தண்டனை முடிந்து வெளியே வந்தவனை போலீஸார் அடிக்கடி வந்து கைது செய்தனர். செய்யாத குற்றத்தை ஏண்டா ஒப்புக்கிட்ட என்று கேட்டால், 'கைகளை காட்டி எப்படி வீங்கி இருக்கிறது பார். அடி வலி தாங்காமல் ஒப்புக்கொண்டேன்' என்பான். ஒரு தவறு செய்து போலீஸ் நிலையம் சென்றால் அவன் செய்யாத குற்றங்களும் அவன் மீது போட்டுவிடுவார்கள்" என்றார்.
குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை, மனைவி மற்றும் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. 2 பேர் உயிரிழப்புக்கு கண்ணன் காரணமாகிவிட்டாரே என்று கண்ணன் செய்த தவறுக்கு அவரது குடும்பத்தினர் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.