அரசுத் துறைகளில் லஞ்சம் வாங்கும் ஊழல் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களில் 15 பேர் கொண்ட பட்டியலை ஊழலுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு, ஈரோட்டில் இன்று (ஞாயிறு) வெளியிடுகிறது.
லஞ்சம் வாங்கும் அரசு அலுவலர்களைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என ஊழலுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழுவினர் அறிவித்தனர். அதற்காகவே பத்து லட்சம் ரூபாயை வங்கியில் டெபாசிட் செய்து வைத்துள்ளனர். இதுவரை 3 பேர், இந்தக் குழுவிடம் இருந்து தலா லட்சம் ரூபாயை பரிசாக பெற்றிருக்கின்றனர்.
15 பேர் பட்டியல் வெளியீடு
இந்நிலையில், தமிழகம் முழுவதும் லஞ்சம் வாங்கும் அரசு அலுவலர்கள் பற்றிய விவரங்களை ஆதாரங்களுடன் பட்டியலிடுவதற்காக இந்தக் குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஈரோடு சக்தி மகாலில் இன்று கலந்தாய்வுக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊழல் எதிர்ப்பு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்கிறார்கள். கூட்டத்தின் முடிவில் முதல்கட்டமாக, ஊழல் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் 15 பேர் பட்டியலை ஆதாரத்துடன் வெளியிடப் போவதாக அறிவித்திருக்கிறது ஊழலுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு.
குவிந்துவரும் புகார்கள்
கலந்தாய்வுக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்த தமிழ் மீட்சி இயக்கத்தின் செயலாளர் நந்தகோபால், ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஊழல் அதிகாரிகளைப் பிடித்துக் கொடுத்தால் பரிசு என்று அறிவித்த நாளில் இருந்து எங்களுக்கு கொத்துக் கொத்தாய் புகார்கள் வந்து குவிகின்றன. பலர், லஞ்ச அதிகாரிகளின் முறைகேடுகளை ஆதாரங்களோடு அனுப்பி இருக்கிறார்கள். திருச்சி மாவட்டத்தில் ஒரு ஊராட்சியில் 120 ஏக்கர் நிலத்தில் முப்பது வருடங்களாக வளர்ந்து கிடந்த மரங்களை அடிமாட்டு விலைக்கு கான்ட்ராக்ட் விட்டு கொள்ளையடித்திருக்கிறார்கள்.
அனல் மின் நிலைய ஊழல்
தமிழகத்தில் உள்ள ஒரு அனல் மின் நிலையத்தில், தொட்டது அனைத்திலும் ஊழல் செய்திருக்கிறார்கள். 75 ரூபாய் மதிப்புள்ள பொருளை 375 ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார்கள். அனைத்து கொள்முதல்களிலும் பாதிக்குப் பாதி அரசுப் பணம் சுரண்டப்பட்டிருக்கிறது. நல்ல நிலையில் உள்ள மின் வாரிய சொத்துக்களை எல்லாம் கழிவுக் கணக்குக் காட்டி கான்ட்ராக்ட் விட்டிருக்கிறார்கள். இதுகுறித்து எல்லாம் மின்சார வாரிய அதிகாரி ஒருவரே கலந்தாய்வுக் கூட்டத்தில் தகுந்த ஆதாரங்களுடன் பேசுவதாகச் சொல்லி இருக்கிறார். மின் தட்டுப்பாட்டில் தமிழகம் இருண்டு கிடப்பதன் பின்னணியில் இருக்கும் ஊழல் விவகாரங்களையும் அவர் பட்டியலிடுவதாகச் சொல்லி இருக்கிறார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் தப்பவில்லை
ஐந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் செய்திருக்கும் ஊழல்கள் குறித்தும் ஆதாரங்களை கொண்டு வருவதாகச் சொல்லி இருக்கிறார்கள். அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வந்திருக்கும் தகவல்கள், ஆதாரங்கள் அடிப்படையில் முதல்கட்டமாக இன்றையக் கூட்டத்தில் ஊழல் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் 15 பேரின் பட்டியலை அறிவிக்கப் போகிறோம்.
எந்தெந்த துறைகள்?
இதில் முக்கியமாக ஊரக வளர்ச்சி, போக்குவரத்து, வருவாய், மின்வாரியம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். ஆதாரங்கள் வருவதைப் பொறுத்து இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம். அடுத்த 15 நாட்களுக்குள், தமிழகம் முழுவதும் உள்ள லஞ்ச அதிகாரிகள், அலுவலர்களின் பட்டியலை புத்தகமாகத் தயாரித்து முதல்வர், தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோரிடம் வழங்கப் போகிறோம்.
இவ்வாறு நந்தகோபால் தெரிவித்தார்.