தமிழகம்

ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலி: 50-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் ரத்து - கட்டண தொகையை திருப்பி அளிக்க ஏற்பாடு

செய்திப்பிரிவு

ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத் தால் இதுவரை 50-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டணத் தொகையை திருப்பி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டதால் விரைவு மற்றும் மின்சார ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. மின்சார ரயில்சேவை நேற்று முன்தினம் மாலை முதல் சீரான நிலையில் விரைவு ரயில்களின் சேவை 2வது நாளாக நேற்று பாதிக்கப்பட்டது.

சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரலில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களில் இதுவரையில் 50-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான விரைவு ரயில்கள் மாற்றுப்பாதைகளில் இயக்கப்பட்டதால் சுமார் 10 மணிநேரம் வரையில் காலதாமதம் ஏற்பட்டது.

அதிகாரி விளக்கம்

இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் செல்ல வேண்டிய 50-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் நடந்த ரயில் மறியல் போராட்டங்களால் பல மணிநேரம் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இன்று முதல் விரைவு ரயில்களின் இயக்கம் சீராகிவிடும் என நம்புகிறோம்.

ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களுக்கு ஐஆர்சிடிசி இணையதளத் தில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு அவர்கள் செலுத்திய முழு தொகையும் திருப்பி அளிக்கப்படும். இதுதவிர, ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களில் மூலம் டிக்கெட் பெற்ற பயணிகள், அவர்கள் அருகில் உள்ள டிக் கெட் கவுண்டர்களில் டிக்கெட்டை காண்பித்து ரசீது பெற்றுக் கொள்ளலாம்.

இந்த ரசீதை மூர்மார்க்கெட் வளாகம், 5வது தளத்தில் இருக்கும் ரயில்வே அதிகாரிகளிடம் சமர்ப்பித்து கட்டண தொகையை பயணத் தேதியில் இருந்து அடுத்த 3 நாட்களுக்குள் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT