தமிழக சட்டப்பேரவையில் பெரும் பான்மை வாக்கெடுப்புக்கு முன்னதாக, எம்எல்ஏக்கள் வெளி யேற்றப்பட்டது, வாக்கெடுப்பு நடத்தப்பட்டு எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றி பெற்றது தொடர்பாக ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய உள்துறைக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் எடப்பாடி பழனி சாமி தலைமையிலான அரசு பிப்ரவரி 16-ம் தேதி பதவியேற்றது. எடப்பாடி பழனிசாமியை ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்தபோதே, 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அறி வுறுத்தியிருந்தார். இதன்படி, அமைச்சரவையின் பெரும் பான்மையை நிரூபிக்க நேற்று முன்தினம் (பிப்ரவரி 18) சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் கூடியது.
பேரவை கூட்டத்தில், முதலில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு உறுப்பினரான செம்மலை உரிமை மீறல் பிரச்சினையை எழுப்பினார். அவர், எம்எல்ஏக்களுக்கு பாது காப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதன்பின் திமுக சார்பில் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
அப்போது ஓ.பன்னீர்செல்வம், ‘‘ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் அல்லது எம்எல்ஏக்களை தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்துவிட்டு வரச்செய்து, அதன்பின் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போது என்ன முடி வெடுத்தாலும் நாங்கள் ஏற்கிறோம்’’ என்றார்.
இதே கருத்தை, திமுக, காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் வலியுறுத்தினர். இதை பேரவைத் தலைவர் பி.தனபால் ஏற்கவில்லை. அவர், ‘‘ரகசிய வாக்கெடுப்பு நடத்துவது விதிகளில் இல்லை. அவையை ஒத்திவைக்கவும் முடியாது’’ என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இதை எதிர்த்து திமுக உறுப்பினர்கள் பேரவைத் தலைவரை முற்றுகை யிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை முதலில் ஒத்தி வைக்கப்பட்டது. அதன்பின் அவை மீண்டும் கூடியபோதும் இதே கருத்தை ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டா லின், காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, முஸ்லிம் லீக்கின் முகமது அபுபக்கர் ஆகியோரும் வலியுறுத்தினர்.
அப்போதும் பேரவைத் தலைவர் பி.தனபால் மறுத்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அரசுக்கு நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். இதையடுத்து, திமுக உறுப்பினர்கள் எழுந்து ஆட்சேபம் தெரிவித்தனர். மீண்டும், பேரவைத் தலைவர் இருக்கை அருகில் சென்று முற்றுகையிட்டனர். பேரவைத் தலைவர் அவைக் காவலர்களை அழைத்து, திமுக உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவிட்டார். ஆனால், வெளியேற்ற முடியாத தால் அவையை 2 மணி நேரம் ஒத்தி வைத்துவிட்டு வெளியேறினார்.
தொடர்ந்து, கூடுதலாக காவல் துறை அதிகாரிகள் வரவழைக்கப் பட்டு, பேரவையில் இருந்த திமுக உறுப்பினர்களை வெளியேற் றும்படி பேரவைத் தலைவர் உத்தர விட்டார். 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் உள்ளே நுழைந்து, திமுக உறுப்பினர்களை குண்டுக் கட்டாக தூக்கி வெளியேற்றினர். இதில், எழும்பூர் எம்எல்ஏ ரவிச்சந்திரன் மயக்கமடைந்ததால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டை கிழிந்த நிலையில் அவையை விட்டு வெளியேறினார். இதனால், சட்டப்பேரவை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
காங்கிரஸ், முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து, பேரவைத் தலைவர் வாக்கெடுப்பு நடத்தினார். திமுக, காங்கிரஸ் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாமல் வாக்கெடுப்பு நடந்தது. அதில், 122 உறுப்பினர்கள் ஆதரவைப் பெற்று எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றி பெற்றதாக பேரவைத் தலைவர் அறிவித்தார். ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 பேர் எதிராக வாக்களித்தனர்.
இதற்கிடையில், சட்டப்பேரவை யில் இருந்து வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்கள், உடனடியாக ஆளுநர் வித்யா சாகர் ராவை சந்தித்து மனு அளித்தனர். அப்போது தாங்கள் தாக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாக, பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்கெடுப்பு நடந்துள்ளதாக குற்றம்சாட்டின. அதன்பின், சட்டப்பேரவை செயலர் ஜமாலுதீன், பேரவை நிகழ்வுகள் மற்றும் பெரும்பான்மை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமியின் அரசு வெற்றி பெற்றது தொடர்பான அறிக்கையை ஆளுநருக்கு அளித்தார்.
இதைத்தொடர்ந்து திமுக சார்பில் எம்பிக்கள் திருச்சி சிவா மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் ஆளுநரை சந்தித்து, பேரவையில் நடந்த வாக்கெடுப்பை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர். அவர்களும், பெரும் பான்மை வாக்கெடுப்பு முடிவை ரத்து செய்ய வேண்டும் என கோரினர்.
இந்நிலையில், பத்திரிகைகளில் வந்த தகவல்கள், பேரவைச் செயலரின் அறிக்கை, திமுக, பன்னீர்செல்வம் தரப்பு மனுக்கள் அடிப்படையில், ஆளுநர் வித்யா சாகர் ராவ் அறிக்கை ஒன்றை தயாரித்து மத்திய உள்துறைக்கு அனுப்பியுள்ளதாக தெரியவந் துள்ளது. இதற்கிடையில், ஜெய லலிதா மறைவு முதல், பெரும் பான்மை நிரூபிக்கப்படுவது வரையி லான நிகழ்வுகள் அடங்கிய தொகுப்பை ஆளுநர் மாளிகை விரைவில் வெளியிட உள்ளதாகவும் ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
பேரவைச் செயலருக்கு உத்தரவு
சட்டப்பேரவையில் நிகழ்ந்த நிகழ்வுகள் குறித்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், திமுக எம்பி திருச்சி சிவா ஆகியோர் அளித்த புகார்கள் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கக் கோரி சட்டப்பேரவை செயலாளரிடம் ஆளுநர் அறிக்கை கேட்டுள்ளார்.
இந்த அறிக்கையை உடனடியாக அளிக்குமாறும் பேரவை செயலா ளர் ஜமாலுதீனுக்கு ஆளுநர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
ஆளுநருடன் முதல்வர் சந்திப்பு
முதல்வர் பழனிசாமி, நேற்று காலை ஆளுநர் மாளிகை சென்று ஆளுநர் வித்யாசாகர் ராவை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது தான் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது குறித்து அவர் ஆளுநரிடம் விளக்கம் அளித்தார். மேலும், தான் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதற்காக ஆளுநரிடம் பழனிசாமி வாழ்த்து பெற்றதாகவும் தெரிகிறது. முதல்வருடன் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோரும் சென்றிருந்தனர்.