எவ்விதப் போராட்டங்களிலும் ஈடுபடக் கூடாது என்று அதிமுகவினருக்கு அக்கட்சி அறிவுறுத்தியுள்ளது.
பெங்களூர் உயர் நீதிமன்ற ஜாமீன் மனு நிராரகரிப்பு எதிரொலியாக, அ.இ.அ.தி.மு.க.வினரிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து, தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்து அவர் மீண்டும் 'ஜொலிப்பார்' என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொருளாளரான அவர், தமது கட்சித் தொண்டர்களிடம் அறிக்கை வாயிலாக வைத்துள்ள வேண்டுகோள் வருமாறு:
"சட்டத்தின் மீதும் நீதித்துறையின் மீதும் ஜெயலலிதா அபார நம்பிக்கைக் கொண்டவர். காவிரிப் பிரச்சினை, முல்லைப்பெரியாறு பிரச்சினை போன்றவற்றை சட்டப்போரின் மூலம் சாதித்துக் காட்டியவர் அவர், தனக்கு ஏற்பட்ட தடைக் கற்களை படிக்கற்களாக மாற்றி தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்து மீண்டும் ஜொலிப்பார்கள், மிளிருவார்கள், தமிழ்நாட்டை ஆளுவார்கள் என்பதில் எள்ளளவும் யாருக்கும் எவ்வித சந்தேகமும் இல்லை.
தற்போது ஜெயலலிதா தமிழ்நாட்டில் இல்லாத சூழ்நிலையைப் பயன்படுத்தி அவரது பாதையில் நடைபெறும் கழக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எதிர்கட்சிகள் செயல்படுகின்றன.
தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் அரசின் மீது சட்டம்-ஒழுங்கு குறித்து பொய் குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர். இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு எள் முனையளவும் இடம் கொடுக்காத வகையில் கழக உடன்பிறப்புகள் நடந்து கொள்ள வேண்டும் என இத்தருணத்தில் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
எதிர்கட்சிகளின் சூழ்ச்சியினை சட்டத்தின் ஆட்சி என்பதையே குறிக்கோளாகக் கொண்ட ஜெயலலிதாவின் வழியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு நிச்சயம் முறியடிக்கும்.
தற்போது நம் கழகப் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீது அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு இறுதி அல்ல. தனது வாதத் திறமையினால், உறுதி கொண்ட நெஞ்சினால், நேர்மை குணத்தினால் தமிழக நலன்களுக்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று வென்றிருப்பவர் அவர். இந்த வழக்கிலும் ஜெயலலிதா வெற்றி பெறுவார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
சட்டத்தின் துணையோடு அவர் விரைவில் தமிழகம் திரும்புவார். எனவே எந்த விதப் போராட்டத்திலும் ஈடுபடவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று அந்த அறிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.