தமிழகத்தில் இருந்து 40 ஆண்டு களுக்கு முன்பு கடத்தப்பட்ட ரூ.6 கோடி மதிப்பிலான சோழர் காலத்து நடராஜர் ஐம்பொன் சிலை அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள தனியார் கலைக்கூடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் முறையாக விசா ரிக்கப்படாமல் முடக்கப்பட்ட முக் கிய சிலை கடத்தல் வழக்குகள், சிலை கடத்தல் தடுப்பு (சிஐடி) பிரிவு ஐ.ஜி.யாக பொன் மாணிக்க வேல் பொறுப்பேற்ற பிறகு, மறு விசாரணைக்கு எடுக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட சுமார் 1,025 ஆண்டுகள் பழமையான சோழர் காலத்து ஐம்பொன் நடராஜர் சிலை ஒன்று வாஷிங்டனில் உள்ள ஃப்ரீயர் சாக்லர் (Freer Sackler) என்ற தனியார் கலைக்கூடத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது.
வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட இந்திய கலைப் பொக்கிஷங்களை அடையாளம் காட்டிவரும் ‘தி இந்தியா ப்ரைடு ப்ராஜெக்ட்’ அமைப்பின் எஸ்.விஜய்குமார் இதுகுறித்த விவரங்களை ‘தி இந்து’விடம் பகிர்ந்துகொண் டார். அவர் கூறியதாவது:
நியூயார்க்கில் உள்ளது டோரிஸ் வியன்னர் கலைக்கூடம். இதன் உரிமையாளர் டோரிஸ் வியன்னர் கடந்த 2013-ல் இறந்துவிட்ட நிலையில் அவரது மகள் நான்ஸி வியன்னர் இதை தற்போது நிர்வகிக்கிறார். பிரபல சிலைக் கடத்தல் மன்னர்கள் சுபாஷ் சந்திர கபூர் (தற்போது திருச்சி சிறையில் விசாரணைக் கைதியாக உள்ளார்), வாமன் கியா உள்ளிட்டவர்களிடம் இருந்து கடத்தல் சிலைகளை வாங்கி விற்பதாக இந்த நிறுவனம் மீது புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக அமெரிக்க சுங்கத் துறையினர் வழக்குப் பதிவு செய்து, நியூயார்க் நீதிமன்றத்தில் வியன்னர் கலைக்கூடத்துக்கு எதிராக கடந்த டிசம்பரில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். இதையடுத்து, ஏற்கெனவே அங்கு சிலைகள், கலைப் பொருட்களை வாங்கிய அமெரிக்க கலைக்கூடங்கள் அனைத்தும் அதுபற்றிய விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டன. தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட சோழர் காலத்து ஐம்பொன் நடராஜர் சிலை வாஷிங்டன் கலைக்கூடத்தில் இருக்கும் விவரம் இதன்மூலமாகத்தான் தெரியவந்தது.
இந்த நடராஜர் சிலையை லண்டனில் உள்ள ராஜாராமா கலைக்கூடத்தில் இருந்து 1973-ல் வாங்கியதாக ரசீது வைத்திருக் கிறது வியன்னர். 1972-க்கு பிறகு, உரிய ஆவணங்களின்றி எந்த கலைப் பொருளையும் நாடு விட்டு நாடு எடுத்துச் செல்ல முடியாது என்பது ஐ.நா. தீர்மானம். அப்படி எடுத்துச் சென்றிருந்தால் அந்தப் பொருளுக்குச் சொந்தமான நாடு அதை திருப்பிக் கேட்கமுடியும்.
இந்த சிக்கலில் இருந்து தப்பிப்பதற்காக, ‘நடராஜர் சிலையை 1972-லேயே வாங்கிவிட்டேன். விற்பனை ரசீது தாமதமாக 1973-ல் போடப்பட்டது’ என்று தந்திரமாக கூறுகிறார் டோரிஸ் வியன்னர். 1972-க்கு முன்புகூட, இந்த சிலை எப்படி அமெரிக்காவுக்கு வந்தது என்பதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. 2002 வரை வியன்னர் கலைக்கூடத்தில் இருந்த இந்த சிலையை 2003 செப்டம்பரில், வாஷிங்டனில் உள்ள ஃப்ரீயர் சாக்லர் கலைக்கூடம் விலைக்கு வாங்கியுள்ளது.
பத்மபூஷண் விருது பெற்ற வித்யா தேகிஜியாதான் அப்போது ஃப்ரீயர் கலைக்கூடத்தின் பொறுப்பாளராக இருந்திருக்கிறார். அவர்கூட இந்த சிலை குறித்து சந்தேகம் எழுப்பாததும், சிலை குறித்த தாய் பத்திரத்தை கேட்காமல் இருந்ததும் வியப்பாக இருக்கிறது.
மேலும், தமிழக தொல்லியல் துறையில் முக்கியப் பொறுப்பில் இருந்த அதிகாரி ஒருவர் ‘1972-73 காலகட்டத்தில் இப்படியொரு சிலை தமிழக கோயில்களில் இருந்து திருடுபோனதாக தகவல் இல்லை’ என சான்று அளித்திருப்பதாகவும் வியன்னர் கலைக்கூடம் தெரிவித்துள்ளது.
இதே காலகட்டத்தில்தான் தமிழகத்தின் பத்தூர், சிவபுரத்தில் மண்ணுக்குள் இருந்து எடுக்கப்பட்ட நடராஜர் சிலைகள் அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டு, அதுதொடர்பான வழக்கில் நியூயார்க் நீதிமன்றம் வரை வந்து வாதாடியது தமிழக தொல்லியல் துறை. ஃப்ரீயர் கலைக்கூடத்தில் உள்ள சிலையின் பின் பகுதியில் துளைகள் உள்ளன. பச்சை நிறத்தினாலான ‘பாட்டினா’ (Patina) படிமமும் அதில் அதிகம் உள்ளது. அந்த சிலை நீண்ட காலமாக மண்ணுக்குள் புதைந்திருந்தது என்பதற்கு இதுவே ஆதாரம். எனவே, பத்தூர், சிவபுரம் சிலைகள் கடத்தப்பட்ட அதே காலகட்டத்தில்தான் இந்த நடராஜர் சிலையும் அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டிருக்க வேண்டும்.
பத்தூர் நடராஜர் சிலையை அன்றே ஒரு மில்லியன் டாலருக்கு (இன்றைய இந்திய மதிப்புக்கு ரூ.6.73 கோடி) விற்றுள்ளனர். ஏறக்குறைய அதே மதிப்புடைய இந்த சிலை எந்தக் கோயிலுக்குச் சொந்தமானது? யாரால், எப்படி கடத்தப்பட்டது? என்ற விவரங்களை உடனடியாக விசாரிக்க வேண்டும். அத்துடன், உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக வாஷிங்டனில் வைக்கப்பட்டுள்ள இந்த நடராஜர் சிலையை மீட்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு விஜய்குமார் கூறினார்.