தமிழகம்

குண்டர் சட்டத்தில் மதுரை நகர் சதம்

என்.சன்னாசி

மதுரை நகரில் சட்டம், ஒழுங்கை பராமரிக்க 24 காவல் நிலையங்கள் உள்ளன. இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பணிபுரிகின்றனர். போலீஸார் பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண் டாலும், நகரில் வழிப்பறி, திருட்டு, கொள்ளை, கொலை போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பதும், அதில் பழைய குற்றவாளிகளே தொடர்ந்து ஈடுபடுவதும் போலீஸாருக்கு கடும் சவாலாக உள்ளது.

இந் நிலையில், குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் வகையில் பழைய குற்றவாளிகள் ஓராண்டுக்கு வெளியேவர முடியாதவாறு, குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய நகர் போலீஸார் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கடந்த ஓராண்டில் மட்டும் நூறு பேரை குண்டர் தடுப்புக் காவலில் கைது செய்துள்ளனர்.

இதில் அதிக பட்சமாக கீரைத்துறை பகுதியைச் சேர்ந்த 18 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திலகர்திடல் பகுதியைச் சேர்ந்தவர்கள் 11 பேர், தெப்பக்குளம்-9 பேர், செல்லூர்-8 பேர், அண்ணா நகர், எஸ்எஸ். காலனி தலா-7 பேர், தல்லாகுளம் 5 பேர், விளக்குத்தூண், அவனியாபுரம், திடீர் நகர், கரிமேடு, திருப்பரங்குன்றம், புதூர் தலா 3 பேர், தெற்குவாசல், ஜெய்ஹிந்த்புரம், மதிச்சியம் காவல் நிலையத்தில் தலா 2 பேர், சுப்ரமணியபுரத்தில் ஒருவர் மீதும் சட்டம், ஒழுங்கு போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், குற்றப்பிரிவு போலீஸாரால் அவனியாபுரத்தில்-1, கரிமேட்டில்-1, தல்லாகுளத்தில்-2, கூடல் புதூரில்-3 மற்றும் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு போலீஸாரால் 3 பேர் என கடந்த ஆண்டு 100 பேர் இந்த சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீஸாரிடம் கேட்டபோது, ‘‘தமிழகத்தில் கடந்த ஓராண்டில் சேலம் மாநகர் போலீஸார் 100-க்கும் மேற்பட்டோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து முதலிடத்திலும், மதுரை 2-வது இடத்திலும் உள்ளது. இந்த நடவடிக்கை தொடரும்’’ என்றனர்.

SCROLL FOR NEXT