தமிழகம்

தாளவாடியில் 6 மலைக் கிராம பள்ளிகளில் சத்துணவு திட்டம் தொடக்கம்: இரண்டு ஆண்டு கோரிக்கை நிறைவேறியது

எஸ்.கோவிந்தராஜ்

‘தி இந்து’ செய்தி எதிரொலியாக ஈரோடு மாவட்டம் தாளவாடி ஒன்றியத்திற்குட்பட்ட 6 மலைக் கிராம துவக்கப்பள்ளிகளில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் நேற்று முதல் சத்துணவு திட்டம் செயல்படத் தொடங்கியது.

ஈரோடு மாவட்டம் தாளவாடி ஒன்றியத்திற்குட்பட்ட செலுமிதொட்டி, அல்லபுர தொட்டி, வைத்தியநாதபுரம், தர்மபுரம், சோளக தொட்டி, ஜெ.ஆர்.எஸ்.புரம் ஆகிய 6 இடங்களிலும், சத்தியமங்கலம் ஒன்றியத்தில் திக்கரையிலும் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் துவக்கப்பள்ளிகள் தொடங்கப்பட்டன. வனப்பகுதியில் உள்ள மலைக் கிராமங்களில் வசிக்கும் மாணவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறாமல், கல்வி பெறுவதற்கு உதவியாக இப்பள்ளிகள் அமைந்தன. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்கள் அதிக அளவில் இந்த பள்ளிக்கு வரும் நிலையில், சத்துணவு வழங்கப்படாததால், மாணவர்கள் பாதிக்கப் பட்டனர். பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல் படுத்துவது குறித்து தமிழக அரசு திட்டம் வடிவமைத்து வரும் நிலையில், மதிய உணவு கிடைக்காமல் தவிக்கும் பள்ளி மாணவர்கள் குறித்து ஜூன் 18-ம் தேதியன்று ‘தி இந்து’வில் விரிவான செய்தி வெளியானது.

இதையடுத்து அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றை அமைத்த ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர், குறிப்பிட்ட பள்ளிகளை ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டார். இதன்படி அதிகாரிகள் குழுவினர் இப்பள்ளிகளை ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்பித்தனர்.

இதையடுத்து ஏழு துவக்கப்பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களுக்கு சத்துணவு வழங் கும் வகையில் சிறப்பு ஆணையினை ஆட்சியர் பிறப்பித்தார்.

இதையடுத்து தாளவாடி வட்டாரத்தில் உள்ள 6 மலைக்கிராம பள்ளிகளிலும் தலா ரூ.30 ஆயிரம் மதிப்பீட்டில், பாதுகாப்பாக சத்துணவு சமைக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கும் பணி தொடங்கியது.

இப்பணி முடிவடைந்த நிலையில் சத்துணவு சமைப்பதற்கான பொருட்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து நேற்று முதல் ஆறு பள்ளிகளிலும் சத்துணவு வழங்கும் திட்டம் தொடங்கியது. முதல்நாளான நேற்று பள்ளிக் குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கலுடன் சத்துணவு வழங்கப்பட்டதால், மகிழ்ச்சியுடன் அவர்கள் சாப்பிட்டனர். தங்களுக்கு சத்துணவு கிடைக்க காரணமாக இருந்த மாவட்ட ஆட்சியருக்கும், ‘தி இந்து’வுக்கும் அவர்கள் மகிழ்வுடன் நன்றி தெரிவித்தது உருக்கமாக இருந்தது.

சத்தியில் தாமதம்

சத்தியமங்கலம் வட்டாரத் திற்குட்பட்ட திக்கரை பள்ளியில் சத்துணவு திட்டம் தொடங்குவதற் கான சிறப்பு ஆணை பிறக்கப்பட்டு, சமையல் செய்ய தடுப்பு வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. 3-ம் தேதியன்று இப்பள்ளியில் சத்துணவு திட்டம் தொடங்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி ஒன்றியம் செலுமிதொட்டி மலைக்கிராம தொடக்கப்பள்ளியில் நேற்று முதல் சத்துணவு திட்டம் செயல்படத் தொடங்கியது. வரிசையில் நின்று பொங்கல் பெற்று சாப்பிட்ட மாணவ, மாணவியர்.

சமையலர் பணிக்கு உதவ வேண்டுகோள்

தாளவாடி மற்றும் சத்தியமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட 7 பள்ளிகளிலும் சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலர் பணியிடம் ஏற்படுத்தப்படாத நிலையில், பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலமாக சமையலர் ஏற்பாடு செய்து கொள்ளுமாறு, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

‘பள்ளி கல்விக்குழு என்பது இங்கு பெயரளவில் செயல்படும் நிலையில், உணவு சமைக்கும் சமையலரை தாங்களாக ஏற்பாடு செய்ய இயலாத நிலையில் உள்ளதாக’ கூறும் இப்பகுதி மக்கள், ‘சமையல் செய்பவருக்கு குறைந்த பட்ச சம்பளத்தொகையை வழங்க தொண்டு நிறுவனங்கள் மூலம் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து தர வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அதிகாரிகளிடம் பேசியபோது, ‘தற்போது ஆட்சியரின் சிறப்பு உத்தரவின்படி இப்பள்ளிகளில் சத்துணவு வழங்க உணவுப்பொருட்கள் வழங்கப்படுகிறது. அடுத்த ஆண்டுக்கான சத்துணவு திட்ட மதிப்பீட்டில், இந்த பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையும் சேர்க்கப்படும். அப்போது சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலர் பணியிடம் உருவாக்குவது தொடர்பாக அரசின் பார்வைக்கு கருத்துரு அனுப்பப்படும்’ என்றார்.

SCROLL FOR NEXT