தமிழகம்

ஜாதி, மதம் பெயரில் சலுகை பெறும் லெட்டர் பேடு கட்சிகளை தடுப்பது எப்படி?- தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கி.மகாராஜன்

ஜாதி மற்றும் மதத்தின் பெயரில் சலுகை பெறும் நோக்கத்தில் செயல்படும் ‘லெட்டர் பேடு’ கட்சிகளைத் தடுப்பது குறித்து பதிலளிக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், பதிவு, அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளின் விவரங்கள், அந்தக் கட்சிகளுக்கு அளிக்கப்படும் சலுகைகள், கட்சிகளைப் பதிவு செய்வதற்கான வழிமுறைகளை, கட்சிகளிடம் வருடாந்திர வரவு, செலவு கணக்கு குறித்து தகவல் தெரிவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

புதுக்கோட்டை நகராட்சி தலைவர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளரை வேட்புமனு தாக்கல் செய்யவிடாமல் தடுத்தது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சியின் மாநில அமைப்புச் செயலர் எம்.கருணாகரன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, பதிவு செய்யப்பட்ட, அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளின் விவரங்களை தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்குப் பின், இந்திய தேர்தல் ஆணையத்தில் எத்தனை அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? ஒரு கட்சியை பதிவு செய்ய என்னென்ன வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன? அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கு அந்த கட்சிக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்? ஒரு கட்சிக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு தேர்தல் ஆணையம் என்னென்ன வழிமுறைகளை கடைப்பிடிக்கிறது? பதிவு பெற்ற, அங்கீகாரம் பெற்ற கட்சிகளுக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படுகின்றன? பதிவு பெற்ற, அங்கீகாரம் பெற்ற கட்சிகளிடமிருந்து தேர்தல் ஆணையம் வரவு, செலவு கணக்குகுறித்து வருடாந்திர அறிக்கை பெறுகிறதா? மதம் மற்றும் ஜாதிரீதியாக சலுகைகள் பெறும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு, பதிவு செய்யப்படாமல் லெட்டர் பேடு அளவில் பல கட்சிகள் இருப்பது தேர்தல் ஆணையத்துக்கு தெரியுமா? இதுபோன்ற கட்சிகளின் செயல்பாட்டை தடுக்க என்னென்ன கடுமையான விதிகள் தேவை ஆகிய கேள்விகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அக். 30-ம் தேதி பதிலளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

குறைந்தது 1 லட்சம் பேர் தேவை

இந்த வழக்கு விசாரணையின் போது, பலர் சொந்த லாபத்துக்காகவும், மிரட்டுவதற்காகவும் கட்சிகளை ஆரம்பிக்கின்றனர். இதுபோன்ற கட்சிகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம், குறைந்தபட்சம் ஒரு லட்சம் உறுப்பினர்கள் இருக்கும் கட்சிகளைத்தான் பதிவு செய்ய வேண்டும் என விதிமுறை வகுக்க வேண்டும் என நீதிபதி யோசனை தெரிவித்தார்.

SCROLL FOR NEXT