தமிழகம்

கூவத்தூரில் எம்எல்ஏக்களுடன் சசிகலா ஆலோசனை

செய்திப்பிரிவு

எம்எல்ஏக்களின் ஆதரவு பெறுவதற்கு மற்றும் ஆலோசனை நடத்துவதற்காக எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள கூவத்தூர் தனியார் விடுதிக்கு, இரண்டாவது நாளாக வந்த சசிகலா, ஆளுநர் அழைப்பு இல்லையென்றால் அதிமுகவின் அடுத்த நடவடிக்கை தொடர்பாக எம்எல்ஏக்களுடன் ஆலோசித்ததாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிமுக எம்எல்ஏக்களிடம் ஆதரவு பெறுவதற்காக, காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் பகுதியில் தனியார் சொகுசு விடுதியில் எம்எல்ஏக்கள் கடந்த 5 நாட்களாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதில், எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக சசிகலா கூவத்தூருக்கு நேற்று முன்தினம் வந்தார். எனினும், முக்கிய அறிவிப்புகள் ஏதும் வெளியிடவில்லை.

இந்நிலையில், இரண்டாவது நாளாக நேற்றும் கூவத்தூர் வந்த சசிகலா எம்எல்ஏக்களை சந்தித்தார். மாலை 4 மணிக்கு வந்த அவர், அங்கு சுமார் ஒருமணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினர்.

சமதான பேச்சு

முன்னதாக, அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் ஜெயக்குமார் கூவத்தூருக்கு வந்தனர். அங்கு, சசிகலா வரும்போது அப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்ககூடாது என்பதற்காக, கிராம மக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று பெண்களிடம் சமாதான பேச்சு நடத்தினர். பின்னர், சசிகலாவை வரவேற்று ஆரத்தி எடுக்கும்படி கேட்டுக்கொண்டனர். பின்னர், சில பெண்களிடம் பணம் வழங்க முன்வந்ததாக கூறப்படுகிறது. எனினும், நீங்கள் கேட்டுக்கொள்வதால் நாங்கள் ஆரத்தி எடுத்து வரவேற்கிறோம் என்றனர். அமைச்சர் விஜயபாஸ்கர் சில ரூபாய் நோட்டுகளை ஒருபெண்ணின் கையில் திணித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.

போலீஸ் குவிப்பு

அதேபோல கிராம மக்களால் பிரச்சினை வராமல் இருக்க காஞ்சிபுரம் எடிஎஸ்பி தமிழ்செல்வன், கடலூர் மாவட்ட ஏடிஎஸ்பி வேதரத்தினம் தலைமையில் ஏராளமான போலீஸாரும் குவிக்கப்பட்டனர். பின்னர் அங்கு வந்த சசிகலா காரில் அமர்ந்தவாறே இரட்டை இலை சின்னத்தை காண்பித்து வணங்கிச் சென்றார்.

அவரை பின்தொடர்ந்து சென்ற செய்தியாளர்களை, வழக்கம்போல் அதிமுகவினரால் நியமிக்கப்பட்ட நபர்கள் தடுத்தனர். அவர்களை போலீஸார் விடுதிக்கு அனுப்பினர். இருப்பினும் விடுதியின் அருகே 200 மீட்டர் தொலைவில் செய்தியாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர், ஒருமணி நேரத்துக்குப் பிறகு விடுதியின் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

நிருபர்களுக்கு அனுமதி மறுப்பு

விடுதியில் கடும் சோதனைக்குப் பிறகு புகைப்படக்காரர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. சசிகலாவிடம் கேள்வி கேட்ககூடாது என்பதற்காக செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் புகைப்படக் காரர்கள் எனக் கூறி, கேமராவுடன் ஒருசில நிருபர்கள் உள்ளே சென்றனர்.

அங்கு சசிகலாவுடன் சுமார் 70 முதல் 80 சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், ஜெயக்குமார், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் இருந்தனர். சசிகலா இருந்த அறைக்கு வெளியே அக்கட்சியைச் சேர்ந்த ஏராளமான அதிமுக நிர்வாகிகள் இருந்தனர்.

ஆலோசனை கூட்டம் நடந்த அறைக்கு செய்தியாளர் சென்றபோது, சட்டமன்ற உறுப்பினர்களுடன் சசிகலா பேசிக்கொண்டிருந்தார். ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை என்றால் அதிமுகவின் அடுத்தகட்ட முடிவு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கூட்ட அறைக்கு வெளியே, மன்னார்குடி மற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்த நபர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

முன்னதாக, விடுதிக்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் நவநீத கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘ஆளுநர் சட்ட விதிகளை பின்பற்றுபவராக இருந்தால், எங்களை ஆட்சியமைக்க அழைத்தே தீர வேண்டும். நாங்களும் சட்டப்படி செயல்படுவதற்காக அமைதியாக காத்திருக்கிறோம்’ என்றார்.

இதேபோல், அமைச்சர் ஓஎஸ். மணியன் கூறும்போது, ‘பன்னீர்செல்வம் திமுகவிடம் விலை போயுள்ளார். சசிகலா எம்எல்ஏக்களுக்கு ஆக்கப்பூர்மான பயிற்சி அளிப்பதற்காக இங்கு வந்துள்ளார். இதனை ஊடகங்கள் தவறாக வெளியிட்டு வருகின்றன’ என்றார்.

SCROLL FOR NEXT