தமிழகம்

சென்னை விமான நிலையம், ஐஸ்ஹவுஸ் பகுதியில் ரூ.2.25 கோடி போதைப் பொருள் சிக்கியது: சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்தவர் கைது

செய்திப்பிரிவு

சென்னை விமான நிலையம் மற்றும் ஐஸ்ஹவுஸில் ஒரு வீட்டில் ரூ.2.25 கோடி மதிப்புள்ள 9 கிலோ போதை பொருளும், 500 கிலோ செம்மரக் கட்டைகளும் பதுக்கி வைத்திருந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 2.30 மணிக்கு கொல்கத்தா செல்ல ஒரு விமானம் தயாராக இருந்தது. அந்த விமானத்தில் போதைப் பொருள் கடத்தப்படவுள்ளதாக கிடைத்த தகவலின்பேரில், அதில் பயணம் செய்ய இருந்த பயணிகளை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் தனித்தனியாக சோதனை யிட்டனர். அப்போது, சிவகங்கை மாவட் டம் இளையான்குடியை சேர்ந்த சிக்கந்தர் அலி(42) என்பவரின் உடைமைகளை சோதனை செய்தபோது, 4 கிலோ எடை கொண்ட போதைப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சிக்கந்தர் அலியை போலீஸார் கைது செய்து அவரிடம் இருந்த போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். அண்ணாநகரில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு அவரை அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில், சிக்கந்தர் அலி சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்பது தெரிந்தது. சர்வதேச விமான நிலையம் வழியாக கடத்தினால் சுங்கச் சோதனை, பாதுகாப்பு சோதனை உள்ளிட்ட சோதனைகளினால் சிக்கிக் கொள்வோம் என்பதால் உள்நாட்டு விமான நிலையம் வழியாக போதைப் பொருளை கடத்த முயன்றதும் தெரியவந்தது.

கொல்கத்தாவுக்கு கடத்திச் சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக மியான்மர் நாட்டுக்கும் பின்னர் அங்கிருந்து மலேசியாவுக்கும் போதைப் பொருளை கடத்திச் செல்ல திட்டமிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. சென்னை ஐஸ்ஹவுஸ் கபூர் 2-வது தெருவில் ஒரு வீட்டில் மேலும், போதைப் பொருட்களை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் விசாரணையின்போது சிக்கந்தர் கூறினார். அதைத் தொடர்ந்து அந்த வீட்டுக்கு காலையிலேயே மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் சென்று சுற்றி வளைத்தனர்.

அந்த வீட்டில் ஹர்த்திக் பாட்ஷா (எ) கபீர்ராஜா என்பவர் தங்கியிருந்துள்ளார். போலீஸார் வருவதை அறிந்து அவர் வீட்டிலிருந்து தப்பிச் சென்றுவிட்டார். வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், அங்கும் 5 கிலோ போதை பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் வீட்டுக்கு பின்புறம் 500 கிலோ எடை கொண்ட செம்மரக்கட்டைகளும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பிடிபட்ட போதைப் பொருளின் சர்வதேச மதிப்பு ஒரு கிலோ ரூ.25 லட்சம். நேற்று பறிமுதல் செய்யப்பட்ட 9 கிலோவின் மொத்த மதிப்பு ரூ.2.25 கோடி. போதைப் பொருட்களை கொண்டு செல்ல மட்டுமே சிக்கந்தர் அலியை சர்வதேச கும்பல் பயன்படுத்தி உள்ளது. இவருக்கு பின்னால் இருந்து செயல்படுபவர்கள் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. சிக்கந்தர் அலி, கபீர்ராஜா இருவரும் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்பது உறுதியாக தெரியவந்துள்ளது. போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த வேறு யாராவது சென்னையில் இருக்கிறார்களா என்பது குறித்து சிக்கந்தர் அலியிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

தங்க கட்டிகள் கடத்திய பெண் கைது

சென்னை விமான நிலையத்துக்கு மலேசியாவில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணிக்கு ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை போலீஸார் சோதனை செய்தனர். ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த பத்மா(38) என்ற பெண் பயணியை சோதனை செய்தபோது, அவர் ஆடைகளுக்கு இடையே தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருப்பது தெரிந்தது. அவரிடம் தனியாக நடத்தப்பட்ட சோதனையில் தலா 100 கிராம் எடை கொண்ட 5 தங்கக் கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பத்மாவை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

SCROLL FOR NEXT