நீலகிரி மாவட்டம் முழுவதிலும், கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள பகுதிகளிலும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம், ''வெப்பசலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும். கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்திருப்பதால், நீலகிரி மாவட்டம் முழுவதும், கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள பகுதிகளிலும் கனமழை பெய்யும்.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரத்தில் சில பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.
தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் மேற்கு மற்றும் தென்மேற்கு நோக்கி தரைக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்'' என்று தெரிவித்துள்ளது.