தமிழக சட்டப்பேரவையில் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை தாக்கல் செய்கிறார்.
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி யதால், கடந்த பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் முடிந்து அதிமுக தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்துள்ளது. இதையடுத்து, 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர், கடந்த ஜூன் 16-ம் தேதி ஆளுநர் ரோசய்யா உரையுடன் தொடங்கி 23-ம் தேதி வரை நடந்தது. பின்னர் தேதி குறிப்பிடப்படாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, பட்ஜெட் கூட்டத் தொடருக்காக சட்டப்பேரவை நாளை மீண்டும் கூடுகிறது. காலை 11 மணிக்கு பேரவையில் 2016-17ம் நிதியாண்டுக்கான முழுமை யான பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். அதிமுக தேர்தல் அறிக் கையில் அறிவிக்கப்பட்ட இலவச கைபேசி, ஸ்கூட்டர் மானியம் உள்ளிட்டவை தொடர்பான அறிவிப் புகள் பட்ஜெட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் தாக்கல் முடிந்ததும், சட்டப்பேரவை தலைவர் பி.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூடி, பட்ஜெட் மற்றும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்று முடிவு செய்யும். இந்த கூட்டத்தொடர் ஆகஸ்ட் 2-வது வாரம் வரை நடத்தப்படலாம் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக பட்ஜெட்டில் சேர்க்க வேண்டிய புதிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடு தொடர்பாக பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. தொழில் மற்றும் வணிக சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, நிதித்துறை செயலர் கே.சண்முகம், வணிகவரி ஆணையர் ச.சந்திரமவுலி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். ஜிஎஸ்டி வரிவிதிப்பை தமிழக அரசு நடைமுறைப்படுத்தக் கூடாது. விற்பனை வரி விலக்கு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்த வேண்டும். மதிப்புக் கூட்டு வரியை ஒருமுனை வரியாக அமல்படுத்த வேண்டும். ரூ.1 கோடி வரை வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வணிகர் சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.