தமிழகம்

தமிழக மக்களை போராட்டத்துக்கு தூண்டுகின்றனர்: வைகோ, சீமான் மீது எச்.ராஜா குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வைகோ, சீமான் ஆகியோர் மக்களை தூண்டுவதாக பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா குற்றம்சாட்டினார்.

மதுரையில் ஏபிவிபி மருத்துவ முகாம் தொடக்க விழாவில் பங்கேற்ற எச். ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அதிமுகதான் காரணம். இவ்வளவு நாள் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க கோரிய அதிமுக, இப்போது விலை உயர்வுக்கு காரணமாக இருந்துள்ளது. தமிழகத்தில் ஆட்சி நிர்வாகம் எவ்வளவு தூரம் சீர்கெட்டுள்ளது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

நெடுவாசல் பேச்சுவார்த்தை தோல்வி அடையவில்லை. மக்கள் ஏற்காவிட்டால் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்றாது. இதனால் விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட வேண்டும். இத்திட்டம் குறித்து தவறான புரிதல் மக்களிடம் உள்ளது. இஸ்ரேல் நாட்டில் நூறு சதவீத எரிசக்தி ஹைட்ரோ கார்பன் திட்டம் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. ஹைட்ரோ கார்பன் பசுமை ஆற்றல். இத்திட்டத்தால் விவசாயம் பாதிக்கப்படாது.

வைகோ, சீமான் போன்றவர்கள் தமிழர்கள் என்ன இளைத்தவர்களா, இத்திட்டத்தை குஜராத்துக்கு கொண்டு போக வேண்டியது தானே என்கின்றனர். குஜராத்தில் 5 திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. வைகோ போன்றவர்கள் மக்களை அநாவசியமாக தூண்டி விடுகின்றனர். எந்த திட்டமாக இருந்தாலும், தமிழகத்துக்கு விரோதமாக மத்திய அரசு ஒருபோதும் நடந்து கொள்ளாது.

திராவிடக் கட்சிகள் தமிழக மக்களையும், மாணவர்களையும் கடந்த 50 ஆண்டுகளாக தனிமைப்படுத்தி வந்துள்ளது. முதல் 20 ஆண்டுகள் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் தமிழர்கள் தான் முதலிடத்தில் இருந்தனர். தற்போது ஒரிசா, ஆந்திராவை சேர்ந்தவர்கள் முதலிடம் பிடிக்கின்றனர். இதற்கு காரணம் தமிழகத்தில் அகில இந்திய போட்டித் தேர்வை எதிர்கொள்ளும் அளவில் கல்வித்தரம் இல்லாதது தான்.

அகில இந்திய போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள முடியாவிட்டால் தமிழக மாணவர்கள் கிணற்று தவளையாகத் தான் இருப்பார்கள். தமிழகத்தின் மீண்டும் பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கத்தில் நீட் தேர்வுக்கு எதிராக சில சிறிய கட்சிகளை திராவிட கட்சிகள் தூண்டி விடுகின்றன.

தமிழகத்தை பாலைவனமாக்கும் மணல் கொள்ளையைத் தடுக்கவும், சுற்றுச்சூழல், நிலத்தடி நீர்மட்டத்தை கெடுக்கும் திண்டுக்கல், வேலூரில் செயல்படும் தோல் பதனிடும் ஆலைகளை தடை செய்யவும் போராட்டம் நடத்தலாமே. இவற்றுக்கு எதிராக யாரும் போராட மாட்டார்கள். எதோ ஒரு விதத்தில் மத்திய அரசை சம்பந்தப்படுத்தி போராட வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்.

அதை முறியடிப்போம். போராட்டத்தை தீவிரப்படுத்தும் நக்சலைட்டுகள், தமிழ் தேச பிரிவினைவாதிகளை கண்டிக்கிறோம். மக்களை திசை திருப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT