தமிழகம்

மைக் முன்பு பேசுவதை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராஜேந்திர பாலாஜிக்கு வைகைச்செல்வன் பதில்

செய்திப்பிரிவு

மைக் முன்பாக பேசுவதை விட்டுவிட்டு, ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று கூறியதாவது: தனியார் பாலில் கலப்படம் என்று கடந்த ஒரு மாதமாக ஓலமிட்டு வரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடந்த ஓராண்டாக என்ன செய்தார் என்பது பொதுமக்கள் மத்தியில் எழும்கேள்வி. பால் வாங்கலாமா, வேண்டாமா என்ற அச்சத்தோடும், பீதியோடும் மக்களை வைத்திருக்கும் நீங்கள், எந்தப் பாலை வாங்க வேண்டும், எந்தப் பாலை வாங்கக் கூடாது என ஏன் அறிவிக்கவில்லை.

அமைச்சர் பதவி என்பது, ஏதோ நீங்கள் அடுத்தவர் நிலங்களை அபகரித்து ஏமாற்றி பட்டா போடுவது போன்று நிரந்தரமானது அல்ல. பரம்பரைச் சொத்தும் கிடையாது. ‘ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும், அரசியல் காற்றில் ஆலமரமும் சாயும்’ என்பது கடந்தகால வரலாறு. அமைச்சர் பதவி இல்லை என்றால் அடுத்த நாள் உங்களுக்கு முகவரி கிடையாது. ஆனால், எனக்கு தமிழ் முகவரி தந்திருக்கிறது. அது என்றும் நிரந்தரமானது.

தனியார் பாலில் கலப்படம் என்று மைக் முன்பாக மட்டும் பேசுவதை விட்டு, ஆக்கப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும். அது அமைச்சரின் கடமையும்கூட. என்னைப் பற்றி ஊடகங்களில் நீங்கள் உளறிக் கொட்டுவதைப் பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தக்காளி அழுகிப்போனால் தப்பில்லை, வேறு தக்காளி வாங்கிக் கொள்ளலாம். மனிதன்தான் அழுகிப் போகக்கூடாது. அழுகல் சிந்தனை கூடாது. கடந்தகால கீழ்மைத்தனங்களை விட்டுவிட்டு, தனியார் பாலில் கலப்படத்தை கண்டறிந்து, குற்றவாளிகளை சட்டத்தின் பிடியில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து தமிழக அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.

சட்டப்பேரவை நடக்கவிடாமல் திமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். பேரவை விவாதங்களில் பங்கேற்று மக்களுக்கான நல்ல கருத்துக்களை ஆளும்கட்சிக்கு வழங்கி இருக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்வது மக்கள் பணி ஆற்றவில்லை என்பது நிருபணம் ஆகிறது. இதனால், அடுத்த தேர்தலில் அவர்களை மக்கள் வெளிநடப்பு செய்து விடுவார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்

SCROLL FOR NEXT