தன்னுடைய தாய் சென்னையில் ஜவுளிக் கடையில் வேலை பார்த்து தன்னை படிக்க வைத்ததால் இளைஞரின் காதல் தொந்தரவை சொன்னால் படிக்க வைக்காமல் நிறுத்திவிடுவார் என்ற அச்சத்திலேயே சோனாலி வீட்டில் சொல்லாமல் தவித்து வந்தது தற்போது தெரியவந்துள்ளது.
கரூர் அருகே கொலையான மாணவி சோனாலியின் தந்தை கண்ணன், தாய் தனலட்சுமி. இவர்களுக்கு சொந்த ஊர் மதுரை மானகிரி. கண்ணன் மதுரை அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். மதுரை அருள்மலர் பள்ளியில் பிளஸ் 2 முடித்த சோனாலி, கரூர் காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். குடும்ப வறுமையிலும் பெற்றோர் தன் மகளை கஷ்டப்பட்டு படிக்க வைத்துள்ளனர். இதுவரை நடந்த தேர்வுகளில் சோனாலி 85 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
கண்ணன் 3 மாதங்களுக்கு முன்பு உடல்நலம் சரியில்லாமல் இறந்துள்ளார். அதன்பின் மகளை மானாமதுரையில் உள்ள தனது பெற்றோர் பராமரிப்பில் விட்டுவிட்டு, மகளை படிக்க வைப்பதற்காகவே தனலெட்சுமி சென்னையில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். தாயார் ஜவுளிக் கடையில் வேலை பார்த்து கஷ்டப்பட்டு படிக்க வைத்ததால் உதயகுமார் கொடுத்த காதல் தொந்தரவை வீட்டில் சொன்னால் படிப்பை நிறுத்திவிடுவார்கள் என்ற அச்சத்திலே சொல்லாமல் தவிர்த்துள்ளார். ஒரு கட்டத்தில் உதயகுமாரின் ஒருதலைக் காதல் நெருக்கடி அதிகமானதால் சக மாணவிகளிடம் சொல்லி புலம்பியுள்ளார். அவர்கள் கொடுத்த தைரியத்தில் கல்லூரி நிர்வாகத்தில் எழுத்துபூர்வமாக புகார் கொடுத்துள்ளார். கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியத்தினால் தான் உதயகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிறகும் கல்லூரிக்குள் அத்துமீறி வகுப்பறைக்குள் நுழைந்து மற்ற மாணவர்கள், பேராசிரியர் முன்னிலையில் கொலை செய்யும் அளவுக்கு விபரீதம் நடந்ததாக கூறப்படுகிறது.
சோனாலி இறந்தது பற்றி தகவல் அறிந்த மாணவியின் உறவினர்கள் மதுரை மருத்துவமனையில் திரண்டனர். கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து சாலை மறியல் செய்தனர். கல்லூரி நிர்வாகம் நேரில் வரும் வரை உடலை வாங்க மாட்டோம் என ஆர்ப்பாட்டமும் செய்தனர்.
இரண்டாவது நாளான நேற்று காலை மாணவியின் தாயார் தனலட்சுமி மதுரை தனியார் மருத் துவமனைக்கு வந்தார். அவர் மகளின் உடலை பார்த்து கதறி அழுதார். மேலும், மாணவியின் குடும்பத்தினர், உறவினர்கள் திரண் டதால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சோனாலி இறந்த கார ணம் குறித்து கல்லூரி நிர்வாகம் தெரிவிக்கவேண்டும். இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். கரூர் போலீஸ் ஆய்வாளர் ஞானசேகரன், உதவி ஆய்வாளர் செழியன் உள்ளிட்ட போலீஸார் நேற்று காலை 9 மணிக்கு தனியார் மருத்துவமனைக்கு வந்தனர். அவர்கள் மாணவியின் உறவினர்களிடம் பேசினர். கல்லூரி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் போலீஸார் முன்னிலையில் கல் லூரி நிர்வாகத்துடன் பேசப்படும் என்றும் பிரேதப் பரிசோதனைக்கு ஒத்துழைக்கும் படி கேட்டுக் கொண்டனர். இதன்பின், மாணவி யின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் காலை 11.30 மணிக்கு மதுரை அரசு மருத்துவமனை பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சோனாலியின் சித்தப்பா ராஜேஷ் கண்ணா கூறியதாவது:
எனது அண்ணன் மகள் நன்றாக படிப்பார். கடந்த 2 நாளுக்கு முன், அவர் 85 சதவீத மதிப்பெண் பெற்றதாக கல்லூரி நிர்வாகம் கடிதம் அனுப்பியது. இச்சூழலில் கல்லூரியில் என்ன நடந்தது என, தெரியவில்லை. காலை 10.30 மணிக்கு அவர் தாக்கப்பட்டு இருக் கிறார். 3 மணிக்குதான் மதுரை மருத்துவமனைக்கு கொண்டு வருகிறோம் எனக் கூறினர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட உதய குமார் எப்படி கல்லூரிக்குள் வந்தார்? அருகிலுள்ள திருச்சி, கரூரில் மருத்துவமனை இருக்கும்போது, மதுரைக்கு கொண்டு வந்தது சந்தேகமாக உள்ளது. கல்லூரி வளாகத்தில் நடந்தது பற்றி உண்மை தெரியவேண்டும். கல்லூரி நிர்வாகம் மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு தப்பியது ஏன்? ஒரே மகளை இழந்து நிற்கிறோம். கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். என்றார்.
சோனாலியுடன் டியூசன் படித்த மதுரையைச் சேர்ந்த கார்த்திக் கூறியதாவது: சோனாலி பத்தாம் வகுப்பிலும், பிளஸ் 2-விலும் நன்றாக படிப்பார். என்னுடன்தான் டியூசனுக்கு வருவார். சோனாலி மீது அவரது தந்தை அதிக பாசம் வைத்திருந்தார். அவர் எங்கள் வீட்டுக்கு சோனாலியை அடிக்கடி அழைத்து வருவார். எங்கு பார்த்தாலும் என்னை வாய் நிறைய அண்ணன் என்றே அழைப்பார். எனது தங்கையை இழந்ததுபோல் உணருகிறேன். அவரை கொலை செய்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
கிராமத்துக்கு அவப்பெயர்
உதயகுமாரின் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே ஆதியனேந்தல் என்ற குக்கிராமம். இக்கிராமத்தில் 20 வீடுகளே உள்ளன. இவரது தந்தை விவசாயியான பெரியசாமி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். உதயகுமாரின் சகோதரி மாதவி, 2 குழந்தைகளுடன் முதுகுளத்தூரில் கணவர் வீட்டில் வசித்து வருகிறார். மாதவிக்கு அடுத்தவர் பூமிநாதன், மதுரையில் ஒரு ஹோட்டலில் பணியாற்றி வருகிறார். மூன்றாவதாக பிறந்தவர் தான் உதயகுமார். இவர் பள்ளிப்படிப்பை பரமக்குடியில் உள்ள ஆர்.எஸ்.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்துள்ளார். பிளஸ் 1 வகுப்பில் தோல்வியடைந்த அவர் அங்கேயே படித்து தேர்ச்சி பெற்று, பிளஸ் 2 முடித்தபின், கரூரில் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளார்.
உதயகுமார் குறித்து கிராமத்தில் சிலரிடம் கேட்டபோது, “அவர் பெரும்பாலும் ஊருக்கு வருவது இல்லை. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வந்துவிட்டுச் சென்றார். நாங்கள் அங்கு படித்துக்கொண்டு இருப்பதாக கருதினோம். இப்படி ஒரு கொலையை செய்து எங்கள் கிராமத்துக்கு அவப்பெயரை தேடித் தந்துள்ளார்” என்றனர்.
வேதனையான நிகழ்வு
சோனாலி கொலை செய்யப்பட்ட சம்பவம் அறிந்து அவரது தாயார் தனலட்சுமியின் ஊரான மானாமதுரை அருகே உள்ள ஏனாதிக்கோட்டை கிராமத்தினர் சோகத்தில் உள்ளனர். அந்த கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி முத்துக்கருப்பி கூறும்போது, “சோனாலி எனக்கு பேத்தி முறைதான். அவளது தாயார் தனலட்சுமியோடு அடிக்கடி ஊருக்கு வருவாள். நல்ல அமைதியான, ஒழுக்கமான பெண். பக்கத்து வீட்டு பிள்ளைகளுக்கு பாடம் எல்லாம் சொல்லிக் கொடுப்பாள். நன்றாக படித்து பெரிய ஆளாக வருவாள் என்ற நம்பிக்கையோடு கரூரில் கல்லூரியில் சேர்த்துவிட்டனர். அவள் கொலை செய்யப்பட்டது மிகவும் வேதனையாக உள்ளது” என்றார்.