தமிழகம்

கச்சத்தீவை தாரை வார்த்தது யார்? - ஸ்டாலின் - ஜெயக்குமார் வாக்குவாதம்

செய்திப்பிரிவு

கச்சத்தீவு பிரச்சினை தொடர்பாக சட்டப்பேரவையில் அமைச்சர் ஜெயக்குமாருடன் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப் பட்டது குறித்து எதிர்க்கட்சித் தலை வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந் தார். அப்போது நடந்த விவாதம்:

மு.க.ஸ்டாலின்:

இலங்கை கடற் படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது, தாக்கப் படுவது, படகுகள் பறிமுதல் செய் யப்படுவது ஆகியவை தொடர்ந்து வருகின்றன. இதனால் தமிழக மீனவர்கள் வாழ்வாதாரம் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், ராமேசுவரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இனியும் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும். கச்சத்தீவு மீட்கப் பட்டால்தான் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். எனவே, கச்சத் தீவை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் டி.ஜெயக்குமார்:

கடந்த 1974-ல் கச்சத் தீவு தாரை வார்க்கப் பட்டது.

(இவ்வாறு அமைச்சர் கூறியதும் திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித் தனர். அவர்களை பேரவைத் தலைவர் அமைதிப்படுத்தினார்.)

அமைச்சர் ஜெயக்குமார்:

1974-ல் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையைத் தான் கூறினேன். யாருடைய ஆட்சி யில் என்றுகூட நான் கூற வில்லை. எனவே, இதற்கு கோபப்பட வேண்டிய அவசியம் இல்லை.

மு.க.ஸ்டாலின்:

மீனவர் பிரச் சினையை அரசியல் ஆக்காமல் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே பிரச்சினைகளை மட்டும் முன்வைத்து பேசினேன். ஆனால், அமைச்சர் வேண்டு மென்ற 1974-ல் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது என்கிறார். 1974-ல் திமுக ஆட்சியில் இருந்தது. கச்சத் தீவு இலங்கைக்கு வழங்கப்பட்ட போது அன்றைய முதல்வர் கருணா நிதி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அனைத்துக் கட்சி கூட்டத்திலும், சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. கச்சத் தீவை வழங்க எதிர்ப்பு தெரிவித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு கருணாநிதி கடிதம் எழுதினார். நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர் இரா.செழியன் தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்தார். ஆனால், கச்சத் தீவை வழங்க எதிர்ப்பு தெரிவித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கையெழுத்து போடகூட அதிமுக மறுத்துவிட்டது.

கச்சத் தீவு யாருடைய ஆட்சியில் தாரை வார்க்கப்பட்டது, இப்பிரச்சினை யில் தமிழகத்துக்கு துரோகம் இழைத்தது யார் என்பதையெல் லாம் தமிழக மக்கள் நன்கறிவார் கள். அதை மக்களின் முடிவுக்கு விட்டுவிடுகிறேன்.

அமைச்சர் ஜெயக்குமார்:

மீனவர் பிரச்சினை தொடர்பாக கடந்த 17-ம் தேதி டெல்லி சென்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்துப் பேசினோம். எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை கைது செய்வது, தாக்குவது, படகுகளை பறிமுதல் செய்வது போன்றவை இனி நடக்காமல் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான கட் டமைப்புகளை உருவாக்க ரூ.1,640 கோடி நிதி வழங்க வேண்டும், இலங்கை அரசு பறிமுதல் செய்துள்ள படகுகளை எவ்வித நிபந்தனையும் இன்றி விடுவிக்க வேண்டும் என அப்போது வலியுறுத்தினோம்.

தமிழக மீனவர்களை பாதுகாக்க வும், அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடக்காமல் தடுக்கவும் படகுகளை விடுவிக்க வும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு ஆண்டு தோறும் ரூ.500 கோடி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் உறுதி அளித்தார்.

இந்திய - இலங்கை மீனவர் களுக்கு இடையே இதுவரை 4 சுற்று பேச்சு முடிந்துள்ளது. இதில் 95 சதவீத பிரச்சினைகள் பேசப்பட்டு முடிவு எட்டப்பட்டுள்ளது. 5 சதவீதம் மட்டுமே சிக்கலில் உள்ளது. சுருக்கு மடி, இரட்டை மடி வலைகள் தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. இழுவை மடி வலைகளை படிப்படியாக தவிர்க்கப்படும் என நமது மீனவர்கள் உறுதி அளித்துள்ளனர். எனவே, பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக் குமார் பேசினார்.

SCROLL FOR NEXT