தமிழகம்

ஊரப்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் சிஎம்டிஏ ஒப்பந்தப்புள்ளி விளம்பரம் வெளியிடப்பட்டது

செய்திப்பிரிவு

ஊரப்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) ஈடுபட்டுள்ளது.

கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு நாளொன்றுக்கு சுமார் 1,250 பேருந்துகளும் பிற பகுதிகளில் இருந்து 2,100 பேருந்துகளும் என தினமும் சுமார் 3,350 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இத்தனை எண்ணிக்கையிலான பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்து செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது.

இதற்கு தீர்வு காணும் வகையில் வண்டலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அரசு முடிவு செய்தது. இதற்காக வண்டலூரில், 65 ஏக்கர் பரப்பளவில், ரூ.376 கோடி மதிப்பில் பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு 2013-ம் ஆண்டு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார்.

ஆனால் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டதில், சிக்கல் எழுந்தது. நிலம் கையகப்படுத்த அதன் உரிமையாளர்களின் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக, வண்டலூரை கைவிட்டு கூடுவாஞ்சேரியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க சிஎம்டிஏ முடிவு செய்தது. இதற்கு, அரசின் ஒப்புதலும் கிடைத்தது.

இதையடுத்து பேருந்து நிலையம் அமைக்க அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நந்தீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலம் மற்றும் அரசு புறம்போக்கு நிலம் என மொத்தம் 51 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இதுகுறித்த அறிவிப்பு சட்டப்பேரவையிலும் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த இடத்தை தேர்வு செய்ததற்கும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து ஊரப்பாக்கம் ஊராட்சி கிளம்பாக்கம் கிராமத்தில் 88 ஏக்கர் நிலத்தை சிஎம்டிஏ அதிகாரிகள் கையகப்படுத்தினர். இந்த இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்போவதாக அறிவுப்பு வெளியிட்டனர்.

இந்த நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில் அரசுக்கு சாதகமான தீர்ப்பு வந்ததை அடுத்து அந்த நிலம் வருவாய்த் துறையிடமிருந்து, சிஎம்டிஏ கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

நிலம் தொடர்பான சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டதால் இங்கு பேருந்து நிலையம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளில் சிஎம்டிஏ தீவிரமாக இறங்கியுள்ளது. அதற்கான டெண்டர் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT