ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள், 600-க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த அவர்கள், இலங்கை ரோந்து கப்பல்களைக் கண்டதும், அங்கிருந்து திரும்ப முயற்சித்தனர்.
ஆனால், இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், நமது மீனவர்கள் பலர் காயமடைந்துள்ளனர். மீன் பிடி சாதனங்களையும் இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தியுள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர இலங்கை அரசிடம் மத்திய அரசு உரிய பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும்'' என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.