தமிழகம்

கன்னடர்களை எச்சரிக்கும் சர்ச்சை போஸ்டர்கள் அகற்றம்: சென்னை போலீஸ் நடவடிக்கை

செய்திப்பிரிவு

கன்னடர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கும் வகையில் சென்னையில் சில இடங்களில் ஒட்டப்பட்டிருந்த சர்ச்சைப் போஸ்டர்கள் அகற்றப்பட்டன.

ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டால் கன்னடர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என சிலர் சென்னையின் சில பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர்.

இதனால், அங்கு கன்னட மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. கன்னடர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் செய்திகள் பரவின.

இந்நிலையில் கர்நாடக காவல்துறை உயர் அதிகாரி எம்.என். ரெட்டி, சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜிடம் தொலைபேசியில் பேசியதாக தெரிவித்துள்ளார்.

விஷமிகள் சிலர் ஒட்டிய சர்ச்சைக்குரிய போஸ்டர்கள் அகற்றப்பட்டதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் வதந்திதகள் மக்கள் நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்தப் போஸ்டரில் சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி, திருச்சி மக்களவை எம்.பி.பி.குமார், எம்.எல்.ஏ. வி.பி.கலைராஜன், ஆயிரம் விளக்கு கே.சி.விஜய் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

சர்ச்சைப் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட இடங்களில் எல்லாம் அவற்றை உடனடியாக அகற்ற வலியுறுத்தியதாக வி.பி.கலைராஜன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT